சென்னை

முதல்வர் தனது அலுவலகத்தில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் கவனிக்க அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை திட்டம் இன்று  தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று அக்கட்சி தலைவர் மு க  ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பு ஏறுக் கொண்டார்.  தேர்தலின் போது தமது கட்சி அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக மு க ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாகவும் 300க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

கடந்த செப்டம்பர் மாதம் துறை செயலாளர்களுடனான கூட்டத்தில் பேசிய முதல்வர் அனைத்து துறைகளின் திட்டங்கள் குறித்த தகவல்களைத் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் ஆன்லைன் தகவல் பலகையை ஏற்படுத்தி, அதன்மூலம் தினசரி ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில், முதல்வருக்காக டேஷ்போர்டு என்ற மின்னணு தகவல் பலகை தயாரிக்கப்பட்டுள்ளது. இன்று இந்த தகவல் பலகையை  முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து  பார்வையிட உள்ளார். இது வழக்கமான தகவல்கள் போல் அல்லாமல் ஒவ்வொரு துறைதோறும், திட்டங்கள் தோறும் நிகழ்நிலை புள்ளிவிவரங்கள் கோரப்பட்டு, அவை இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்பது சிறப்பு அம்சமாகும்..

முதலமைச்சருக்கான மின்னணு தகவல் பலகை ஏற்கனவே மத்தியப் பிரதேசம், ஆந்திரா, நாகாலாந்து, இமாச்சலப்பிரதேசம், உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.