வைத்தீஸ்வரன் கோயில் கும்பாபிஷேகம் ஸ்பெஷல் – வைத்தீஸ்வரன் கோவில் சிறப்புகள்

இன்று நடைபெற்ற வைத்தீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்துக்காக ஒரு சிறப்புப் பதிவு

நமது உடலே இறைவனின் ஆலையம் என்பது சித்தர்களின் கருத்தாகும்.

🎇ஒரு மனிதனுக்கு நல்ல உடல் நலம் இருந்தால் போதும்.அதை விட சிறந்த செல்வம் வேறெதுவுமில்லை!ஆனால் பலருக்கும் அவர்களின் உடலின் ஏதாவது ஒரு வகை நோய்கள் ஏற்பட்டு அவர்களை வாட்டுகிறது.இப்படிப்பட்டவர்களுக்கு வைத்தியராக அருள் புரியும் #வைத்தீஸ்வரன் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி கோவிலின் சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

🌲தல வரலாறு🌲

⚘வைத்தீஸ்வரன் கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.

⚘இக்கோவிலின் இறைவன் சிவபெருமான் #வைத்தியநாதர் என்றும்,அம்பாள் #தையல் நாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

⚘இக் கோவிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்று ஒரு பெயரும் உண்டு.

⚘புள் என்ற சடாயு பறவை ராஜனும், இருக்கு என்ற வேதமும், வேள் என்கிற முருகப்பெருமானும், ஊர் என்கிற சூரியன் ஆகிய நால்வரும் இத்தலத்தில் வழிபட்டு நலம் பெற்றதால் இப்பெயர் பெற்றது.

⚘நவ கிரகங்களுள் ஒன்றான அங்காரகன்(செவ்வாய்),தொழுநோயால் மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக சிவனார் வைத்தியநாத சுவாமியாக எழுந்தருளி,அவரின் பிணி தீர்த்தார்.ஆகையால் இக்கோவில் ஒன்பது கிரக கோவில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் கோவில் தலமாக விளங்குகின்றது.

⚘இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்த போது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைலநாயகி என்று பெயர் வந்தது.

⚘இக்கோவிலின் குளம் சித்தாமிர்த குளம் என அழைக்கப்படுகிறது.

⚘முற்காலத்தில் இந்த குள கரையில் சதானந்த முனிவர் தவம் செய்து கொண்டிருந்த போது,ஒரு பாம்பு தவளையை முழுங்க முயலும் போது அவற்றை சபித்தார் சதானந்த முனிவர்.இதன் காரணாமாக இன்றும் இக்குளத்தில் தவளை,பாம்பு போன்றவை காணப்படுவதில்லை.

⚘இக்கோவிலில் மூலவர் சந்நிதிக்கு முன்பு தங்கம் மற்றும் வெள்ளியினால் இரண்டு கொடிமரங்கள் உள்ளன.மற்ற கோவில்களிலில் எல்லாம் நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட அமைப்பில் இருக்கும்.  ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அனைத்தும் இக்கோவிலின் மூலவரான வைத்தியநாதரின் சந்நிதிக்கு பின்புறம் ஒரே நேர்கோட்டில் அமைந்து இறைவனின் கட்டளைக்கு பணிந்து பக்தர்களின் நோய்களையும்,தோஷங்களையும் போக்குவதாக ஐதீகம்.

⚘இக்கோவிலுக்கு கிழக்கில் பைரவ மூர்த்தியும்,தெற்கில் விநாயகர்,மேற்கில் வீரபத்திரர்,வடக்கில் காளி ஆகியோர் காவல் புரிகின்றனர்.

⚘தேவார பாடல் பாடப் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று.ஐந்து பிரகாரங்களை கொண்ட இந்த கோவில் ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டது.தருமபுர ஆதனத்தின் கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது.

卐சிறப்புகள்卐

👑4448 நோய்களை தீர்க்கும் சித்த மருத்துவத்தை கண்டு பிடித்த சித்தர்களின் தலைமை பீடமாக இக் கோவில் கருதப்படுகிறது.

👑பக்தர்களின் எத்தகைய நோய்களையும் தீர்ப்பதற்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி, வேப்பிலை ஆகியவற்றை கலந்து “திருச்சாந்து” உருண்டை தயாரித்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.  இதை உண்பவர்கள் எத்தகைய நோய்களும் நீங்கி முழு குணம் அடைவர் என்பது இங்கு வந்து வழிபடுபவர்களின் நம்பிக்கையாக உள்ளது.

👑தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு விற்கப்படும் புனுகு எண்ணையை வாங்கி தேய்த்து,நீராடி இறைவனை வழிபட்டால் அவை நீங்கும் என கூறப்படுகிறது.

👑இங்கு தரப்படும் விபூதி, வில்வம்,புற்றுமண் தைலம் கலந்து தயாரிக்கப்படும் மருந்து வெண்குஷ்ட நோய்க்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது.உடல் பிணி மட்டுமன்றி நமது பிறவி பிணியையும், கல்வித் தடை, குழந்தையின்மை, திருமண தடை,தொழில் வியாபார நஷ்டம் ஆகிய அனைத்து கஷ்டங்களையும் வைத்தியநாதசுவாமி தீர்த்து வைப்பார் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

👑இக்கோவிலில் இருக்கும் கற்பக விநாயகர் பக்தர்களின் எத்தகைய கோரிக்கையையும் நிறைவேற்றும் சக்தி கொண்டவராவார்.

👑இங்குள்ள அங்காரகன் சந்நிதி எனப்படும் செவ்வாய் பகவான் சந்நிதியில் செவ்வாய் தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்யப்படுகின்றன.இங்குள்ள முருகப்பெருமான் செல்வ முத்துக்குமாரர் என அழைக்கப்படுகிறார்.

👑அர்த்த ஜாம பூஜையின் போது புனுகு, சந்தனம், பச்சைக் கற்பூரம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம்,
பால், பால் சாதம் ஆகியவற்றுடன் விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது.

👑இங்கிருக்கும் அம்மனான தையல் நாயகியை வழிபடுவதால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலாரிஷ்டம் தோஷம் நீங்கும்.மருத்துவர்கள் மற்றும் மருத்துவ கல்வி பயிலும் மாணவர்கள் ஏராளமாக வந்து வழிபாடும் ஒரு கோவிலாக இது இருக்கிறது.

👑மொட்டை அடித்தல்,காது குத்துதல்,அன்னதானம் போன்ற நேர்த்தி கடன்களை பக்தர்கள் நிறைவேற்றுகின்றனர்.

👑தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால்,இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி,உடம்பில் கட்டிகள்,பருக்கள்,வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர்.

👑தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக் குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.

🛣️அமைவிடம்🛣️

அருள்மிகு ஸ்ரீ வைத்திய நாதர் திருக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவில் எனும் ஊரில் அமைந்துள்ளது.