பொய்ச்செய்திப் பதற்றமா, பொறுத்துக்கொள்ளாத ஆத்திரமா?

சிறப்புக் கட்டுரை :  அ. குமரேசன்

சூரியனுக்கு பூமி தனது முகத்தின் இந்தப் பக்கத்தைக் காட்டியபோது அந்த ஆணை வந்தது. தன்னைத் தானே முழுச்சுற்று சுற்றிய பூமி சூரியனுக்கு மறுபடி தனது முகத்தின் இந்தப் பக்கத்தைக் காட்டிய சிறிது நேரத்தில் அந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டது. முதலில் மத்திய அரசின் தகவல் – ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் ஆணை பிறப்பிக்கப்பட்ட உண்மையையும் அதற்கு நாடு தழுவிய அளவில் கண்டனங்கள் எழுந்த உண்மையையும் சொல்லிக்கொண்டிருந்த ஊடகங்கள், பின்னர் ஆணை பிரதமரால் விலக்கப்பட்ட உண்மையையும் அது குறித்துக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்ட உண்மையையும் சொல்லத் தொடங்கின. ஊடகங்களில் பொய்ச்செய்தி வெளியானால் அந்தச் செய்தியைக் கொடுத்த செய்தியாளருக்கான அங்கீகாரம் (அக்ரெடிசன்) விலக்கப்படும் என்பது அமைச்சகத்தின் ஏப்ரல் 2 காலை அறிவிப்பு. நாடு முழுவதும் ஊடகவியலாளர் அமைப்புகளும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, பிரதமர் அந்த அறிவிப்பை விலக்கி ஆணையிட்டது ஏப்ரல் 3 நடுப்பகல் நடவடிக்கை.

 

ஏற்கெனவே கருத்துச் சுதந்திரப் பாதுகாப்பைப் பொறுத்தவரையில் அரசின் பெயர் கெட்டுப்போயிருக்கிறது. உலக நாடுகளில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைப் பொறுத்தவரையில் இந்தியா 136வது இடத்திற்கு இறங்கியுள்ளது என்று ‘எல்லைகள் கடந்த செய்தியாளர்கள்’ அமைப்பு சென்ற ஆண்டு அறிக்கை தெரிவித்தது. முன்பு இருந்த இடத்தை விடவும் 3 இடங்கள் கீழிறக்கப்பட்டு,  பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் பின்னால் இந்தியா தள்ளப்பட்டுவிட்டது என்று அதன் அறிக்கை கூறுகிறது. இந்த நிலையில், இவ்வளவு அப்பட்டமாக ஒரு ஒடுக்குமுறை நடவடிக்கை தேவையா என்று அரசின் நலம் நாடிகள் யாரேனும் எடுத்துரைத்தார்களோ அல்லது சுயமான முடிவோ, அமைச்சர் ஸ்மிருதி இராணியின் நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இவ்வளவு விரைவில் செல்லாததாக்கியது வரவேற்கத்தக்கதுதான். நிச்சயமாக இது ஜனநாயகத்தின் வெற்றி, ஊடகச் சுதந்திரத்தின் வெற்றி.

 

ஆயினும் பொங்கிய எரிமலை பொசுக்கென்று அடங்கிவிட்டதாக மகிழ்ச்சியடைந்துவிட முடியாது. ஏனெனில் ஏற்கெனவே பாறைக்குழம்பாய்க் கொதிநிலையில் இருக்கிற அச்சுறுத்தல் சூழலை, செய்தியாளர் அங்கீகார விலக்கல் என்ற ஒரு சட்டப்பூர்வ ஏற்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சிதான் கைவிடப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த அச்சுறுத்தல் சூழலும், தாக்குதல்களும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

 

எது பொய்ச்செய்தி?

குறிப்பிட்ட செய்தி பொய்யானது என்று எப்படி முடிவு செய்வீர்கள், ஒரு செய்தி வெளியாவதற்கு சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்தின் செய்தியாளர் மட்டும்தான் பொறுப்பா? அதை வெளியிட முடிவு செய்த ஆசிரியர் குழு, வெளியாவதைச் செயல்படுத்திய நிர்வாகத்தினர் ஆகியோருக்குப் பொறுப்பில்லையா? ஒரு தரமான ஊடக நிறுவனம் தனது செய்தியாளரைக் காட்டிக்கொடுக்குமா? ஆட்சியாளருக்கு இடைஞ்சலான செய்திகளை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிற ஊடகவியலாளர்களை மிரட்டுகிற வேலைதானே இது? அப்படியே அரசின் அங்கீகாரம் (அது இருந்தால்தான் குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்கிற நிகழ்ச்சிகளில் செய்தியாளர்கள் கலந்துகொள்ள முடியும்) விலக்கிக்கொள்ளப்படுவதால், ஊடகவியலாளர்கள் எழுதுவதையும் ஒளிப்பதிவு செய்வதையும் பதிவேற்றுவதையும் நிறுத்திவிடுவார்களா? இப்படியான கேள்விகள் ட்விட்டர் தளத்தில் படையெடுத்தபோது, அதையெல்லாம் இறுதிப்படுத்த குழு அமைக்கப்படும் என்றார் அமைச்சர். அதையெல்லாம் இறுதிப்படுத்தாமலே இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது ஏன் என்று அடுத்த சுற்றுக் கேள்விகள் புறப்பட்டபோது, ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளைச் சொல்ல ஊடகவியலாளர் அமைப்புகளை வரவேற்பதாக அழைப்பு விடுத்தார். அந்தக் கேள்விக்கு இது பதில் இல்லையே என்ற மூன்றாவது சுற்றுக் கேள்விகளில் அவர் சிக்குவதற்குள் பிரதமர் தலையிட்டுவிட்டார்.

 

உண்மையாகவே இது பிரதமருக்கே தெரியாமல் பிறப்பிக்கப்பட்ட ஆணையா? அல்லது, அவசர நடவடிக்கை எடுத்ததற்கான விமர்சனமாரிகள் அமைச்சகத்துக்குப் போகட்டும், பக்குவ நிதானத்துடன் அதைத் தடுத்ததற்கான பாராட்டுமாலைகள் தன் கழுத்தில் விழட்டும் என்ற எண்ணமா? இந்த ஐயம் ஏன் வருகிறது என்றால், ஊடகங்கள் மீது இப்படிப்பட்ட நடவடிக்கைகள் பாயும் என்ற எச்சரிக்கையை அவ்வப்போது மத்திய அமைச்சர்களும் பாஜக தலைவர்களும் விடுத்து வந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் பிரதமர் தலையிடவில்லையே? இப்போது அறிவித்தது போல பொய்ச்செய்தி விவகாரங்களை இந்திய பத்திரிகை மன்றம் கவனித்துக்கொள்ளட்டும் என்று சொல்லவில்லையே?

 

செய்தியில் பாகுபாடு

பொய்ச்செய்தி என்று வெளியாகிறதா? தவறான செய்தி வரும். ஒரு நிகழ்வின் முக்கியத்துவத்தை அளவுக்கு மேல் கூட்டியோ, அநியாயத்துக்குக் குறைத்தோ செய்தி வரும். எடுத்துக்காட்டாக, தொழிலாளர்களின் நாடுதழுவிய போராட்டங்கள், அதையொட்டி லட்சக்கணக்கான தொழிலாளர்களின் பேரணிகள் என்ற நிகழ்வுகளின்போது, பத்திரிகையில் ஒரு மூலைக்குத் தள்ளப்பட்ட செய்தியாக வரக்கூடும். தொலைக்காட்சிகளில் கவனிப்பற்ற ஒரு செய்திநேர ஒளிபரப்போடு நிறுத்தப்படக்கூடும்.

 

ஆனால் ஒரு நடிகர் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்றால், காலையில் வீட்டிலிருந்து புறப்படுவது, இடையில் ஒரு வீட்டில் தேநீர் குடிப்பது, யாரையாவது சந்திப்பது, இறுதியில் பொதுக்கூட்டத்தில் பேசுவது என நேரடி ஒளிபரப்பாக்கப்படும். இன்னொரு நடிகர் தன் ரசிகர்களோடு படம் எடுத்துக்கொள்வது, அரசியல் நுழைவுக்கு முன் ஆன்மீக ஆசிர்வாதத்திற்காக இமயமலைக்குப் போவது, அங்கே ஒரு புதிய குருநாதரோடு உரையாடுவது எல்லாம் தலைப்புச் செய்திகளாக்கப்படும். தேர்தல் நேர கருத்துக் கணிப்புகளில், மக்கள் மனநிலையை உண்மையாகப் பிரதிபலிக்காத முடிவுகள் வெளியிடப்படும். எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் ஒரு வலுவான விதியை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற ஆணையை எதிர்த்து வட மாநிலங்களில் தலித் அமைப்புகள் நடத்தும் போராட்டத்தையொட்டி, அந்த விதியைப் பற்றிய பொது விவாதத்தை வளர்ப்பதில் அக்கறையின்றி, போராட்டம் வன்முறையாக மாறியது என்ற கோணத்தில் செய்திகள் வெளியிடப்படுவதைப் பார்க்கத்தான் செய்கிறோம்.

 

அதேபோல் ஒரு தரப்புச் செய்தியை மட்டும் வெளியிடுகிற ஊடகங்களும் உண்டு. ஆனாலும் மிகக்கவனமாக, அந்தத் தரப்பைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள் என்பதாக ஒரு வரி சேர்க்கப்பட்டுவிடும். எப்போதாவது, அந்த ஊடக நிறுவனமே அல்லது அதன் செய்தியாளரே நிலைமையை நேரில் பார்த்தது போல, யாரையும் மேற்கோள் காட்டாமல் அவர்களது செய்தியாகவே வெளியிடப்படுவதும் உண்டு. அப்போது, எதிர்த்தரப்பினர் அது பொய்ச்செய்தி என்று கொந்தளிப்பார்கள். அவர்கள் தருகிற விளக்கமும் தனிச்செய்தியாக வெளியிடப்படும், வெளியிடப்பட வேண்டும்.

 

அரசாங்கம் வெளியிடக்கூடிய ஒரு அறிவிப்பை மாற்றியோ அதன் ஒரு நடவடிக்கையைத் திரித்தோ யாரும் செய்தி வெளியிடுவதில்லை. ஆனால் ஆட்சியாளர்களுக்கு எப்போது ஆத்திரம் வருகிறது என்றால், அந்த அறிவிப்பு அல்லது நடவடிக்கை குறித்த விமர்சனமும் அதே செய்தியில் இடம்பெறுமானால், சந்தேகங்கள் எழுப்பப்படுமானால், ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்கப்படுமானால், அப்போதுதான்! விளம்பரமாவதமற்கு மாறாக விமர்சனமாகிறதே என்ற ஆத்திரம்!

 

ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுவது பற்றியோ, ஜிஎஸ்டி பற்றியோ, பணமதிப்பு ஒழிப்பு பற்றியோ, கறுப்புப்பணம் கைப்பற்றப்பட்டது பற்றியோ அரசு சொல்வதை அப்படியே வெளியிட்டால், ஊடகத்தின் பொறுப்பான பணி என்று தட்டிக்கொடுப்பார்கள். அந்த நடவடிக்கைகள் மக்களை எப்படியெல்லாம் தாக்குகின்றன என்றோ, கைப்பற்றப்படாத கறுப்புப் பணம் பலமடங்கு இருக்கிறது என்றோ சேர்த்து வெளியிட்டால், ஊடக அறத்தை மீறுவதா என்று கேட்பார்கள். அப்படி “மீறுகிறபோது” நேரடியாக நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். ஆனால், வேறு பதற்றமான சூழல்கள் ஏற்படுகிறபோது, ஊடகங்களின் தவறான தகவல்கள்தான் அதற்குக் காரணம் என்று கூறி கட்டுப்படுத்த முயல்வார்கள்.

 

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரின் சாகசங்களை மட்டும் செய்தியாக்கினால் பொறுப்பான செயல். அந்த நடவடிக்கைகள் எப்படித் தோல்வியடைகின்றன என்றும், மக்கள் மேலும் மேலும் தனிமைப்படுவது பற்றியும் அக்கறையோடு சுட்டிக்காட்டினால் பொறுப்பற்ற செயல். இது போன்ற நிலைமைகளில், ஒரு ஊடகவியலாளர் தான் நேரில் பார்த்து உறுதிப்படுத்தியதை மட்டுமே செய்தியாக்கிக்கொண்டிருக்க மாட்டார். ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் திடீர்த்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் சிலர் கொல்லப்பட்டதாகவும் அந்த வட்டார மக்கள் பதற்றத்தோடு பேசிக்கொண்டால், அதையும் செய்தியாக்கவே அவர் முயல்வார். மக்கள் பேசிக்கொள்கிறார்கள் என்றே அந்தச் செய்தி வரும். அப்படியொரு நிகழ்ச்சி நடக்கவில்லை என்றால் அதைத் தெளிவுபடுத்துகிற பொறுப்பு ஆட்சி நிர்வாகத்திற்கும் இருக்கிறது, அந்த விளக்கத்தை வெளியிடுவது ஊடகத்தின் கடமை. ஆனால், அப்படியொரு பதற்றம் நிலவுவதோ, மக்களிடையே அப்படிப்பட்ட பேச்சு அடிபடுவதோதான் செய்தியாகிறது என்று பார்க்காமல், அந்தச் செய்தியால்தான் பதற்றம் பரவுகிறது என்று பார்ப்பதால்தான் பொய்ச்செய்தி என்று முத்திரை குத்தப்படுகிறது. அந்த முத்திரையின் கீழ்தான் காஷ்மீரில் இணையத்தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன, பத்திரிகை அச்சகங்கள் மூடப்படுகின்றன.

 

முன்னோடியாக டிரம்ப்

இது உலகின் பல பகுதிகளிலும் உள்ள போக்கு எனலாம். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ‘பொய்ச்செய்தி’ வெளியிட்டால் கடும் நடவடிக்கை என்று மிரட்டுகிறார். எகிப்து அரசு அதைப் படியெடுக்கிறது. 2016ம் ஆண்டில் உலகம் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் 259 பேர். கொல்லப்பட்டவர்கள் 79 பேர் என ‘ஆர்ட்டிகிள் 19’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.  இந்தியாவில் சென்ற ஆண்டு ஏப்ரல் வரையிலான 16 மாதங்களில் ஊடகவியலாளர்கள் மீது 54 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ‘ஹூட்’ என்ற ஊடகக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான தாக்குதல்கள் ஆட்சியாளர்களாலும் அதிகார அமைப்புகளாலும் தொடுக்கப்பட்டவை. 1975-1977ம் ஆண்டுகளில் 21 மாதங்கள், சட்டப்பூர்வ அறிவிப்பாகவே பத்திரிகைச் செய்திகளை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் ‘எடிட்’ செய்த அவசரநிலை ஆட்சியை மறந்துவிட முடியுமா?

 

சென்ற மாத இறுதி வாரத்தில், மத்தியப் பிரதேச மாநிலத்தில் மணல்கொள்ளையர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையேயான “நல்லுறவு” பற்றி அம்பலப்படுத்திய தொலைக்காட்சி செய்தியாளர் சந்தீப் சர்மா, மணல் லாரிச் சக்கரத்தின் கீழ் நசுக்கிக் கொல்லப்பட்டார். அதே நாளில், பீகார் மாநிலத்தில் இரண்டு பத்திரிகையாளர்கள் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்கள். மாற்றுக் கருத்துகளை வலுவாகச் சொன்னதற்காகத் தோட்டாக்களால் துளைக்கப்பட்டார் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ்.

 

கொலைக்கு ஈடான கொடூரமாக, கைது, சிறைக்காவல், வழக்குகள் போன்ற தாக்குதல்களுக்கும் ஊடகவியலாளர்கள் உள்ளாகிறார்கள். தமிழகம் இதில் விதிவிலக்கில்லை. ஒரு கார்ட்டூன் மூலம் மக்களின் மனக்கொதிப்பை வெளியிட்ட பத்திரிகையாளர் பாலா கைது செய்யப்பட்டது, உள்ளாட்சித் துறையில் நடைபெறும் முறைகேடுகளை எழுதியதற்காக பத்திரிகையாளர் அன்பு கைது என்று, அவர்களோடு கருத்து வேறுபாடு உள்ளவர்களும் ஏற்கவியலாத நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன. ஒரு பெரிய பத்திரிகையில் வெளியான கட்டுரையை மதப் பிரச்சனையாகத் திரித்து, அதன் இணையப் பதிப்பிலிருந்து அந்தக் கட்டுரையையே தூக்க வைத்தார்களே! அதன் ஆசிரியர் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்காக நிற்கிற கம்பீரத்தை இழந்து, மதவாத அரசியலர்களின் கெடுபிடிக்குப் பணிந்தாரே! மத்தியில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, தொலைக்காட்சி விவாதங்களில் குறிப்பிட்ட ஒருவர் நெறியாளுநராக வரக்கூடாது என்று கெடுபிடி செய்தபோது அதற்கு ஒரு பெரிய தொலைக்காட்சி நிர்வாகம் பணிந்ததே!

 

உண்மைச் செய்திகளை உறுதிப்படுத்த

எரிமலையின் கொதிக்கும் பாறைக்குழம்பு போன்ற நிலைமை பற்றி நிறையவே சொல்லலாம். கொதிக்க வைப்பவர்கள் இரண்டு உண்மைகளக் காணத் தவறுகிறார்கள். ஒன்று –ஒடுக்குமுறைகளால் செய்திகள் நின்றுவிடாது, மாறாக, ஒடுக்கப்பட்டதும் செய்தியாக மக்களைச் சென்றடையும். இரண்டு – ஊடகச் சுதந்திரத்தை முடக்குவது சம்பந்தப்பட்ட ஊடகவியலாளரின் பிரச்சனை மட்டுமல்ல. அடிப்படையில் எந்தச் செய்தியையும் அறிந்துகொள்ள மக்களுக்கு உள்ள உரிமை பறிக்கப்படுகிற வன்முறையே அது. 119 நாடுகளில் தகவல் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் சட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்ற ஆக்கப்பூர்வமான வளர்ச்சியும் ஏற்பட்டிருப்பதாக ‘ஆர்ட்டிகிள் 19’ தெரிவிக்கிறது. இங்கே அந்தச் சுதந்திரத்தை எப்படியாவது கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரபீடங்கள் திரும்பத் திரும்ப இறங்குகின்றன. உலக மேடையில் இந்தியாவின் பெருமையைக் கீழிறக்குகிற அப்படிப்பட்ட மக்கள் தட்டிக்கேட்கிற நிலை வர வேண்டும்.

 

உண்மையாகவே ஒரு ஊடக நிறுவனம் பொய்ச்செய்திகளை வெளியிடுவதாக வைத்துக்கொள்வோம், அந்த நிறுவனத்திற்கான அங்கீகாரத்தை மக்களே விலக்கிக்கொண்டுவிடுவார்கள். அப்படியொரு நிலை வருவதை எந்த நிறுவனம் விரும்பும்? ஊடக நிறுவனங்களோ, ஊடகக்காரர்களோ முழுக்கமுழுக்க நேர்மையாகச் செயல்படுவதாகச் சான்றிதழ் அளித்துவிட முடியாதுதான். ஆகவே அவர்கள் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களல்ல. அந்த விமர்சன உரிமையைச் சரியாகவும், உள்நோக்கமின்றியும் நேர்மையாகவும், கூர்மையாகவும் பயன்படுத்துவதே செய்திகளின் உண்மைத்தன்மையை மேலும் மேலும் உறுதிப்படுத்துவதற்கான வழி. அதிகாரத்தைப் பயன்படுத்தி அங்கீகாரத்தை விலக்குவதோ, வழக்கு ஆயுதத்தைக் காட்டி அச்சுறுத்துவதோ அல்ல.