சென்னை:

திருவண்ணாமலை தீபத்திருவிழாவை காண அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால், 3 நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்து உள்ளது.

பஞ்சபூத தலங்களில் ஒன்றானதும், அக்னிஸ்தலமாக இருப்பதுமான, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் தீபத்திருவிழா உலகப்புகழ் பெற்றது. அதன்படி, இந்த ஆண்டும் தீபத்திருவிழாவுக்கு கொடியேற்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  கடந்த 1 ஆம் தேதி காலை 5.30 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

10 நாள் நடைபெறும் இந்த விழாவின் முக்கிய விழாவான மகா தீபதிருவிழா 10ம் நாளான வருகிற 10ம் தேதி  நடைபெறுகிறது. அன்று மாலை  6 மணிக்குக் கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும்.

தீபதிருவிழாவன்று திருவண்ணாமலையில்  பல்லாயிரக் கணக்கான மக்கள் திரள்வார்கள் என்பதால் மக்களின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேரமராக்கள் பொருத்தும் பணி  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், தமிழக போக்குவரத்துத் துறை சார்பில், 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக வும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 2615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக  தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சிறப்புப் பேருந்துகள் கோவை, மதுரை, திருநெல்வேலி, சென்னை, தூத்துக்குடி, விழுப்புரம், சேலம், ஓசூர், பெங்களூர், திருச்சி, தருமபுரி ஆகிய இடங்களிலிருந்து இயங்கும் என்றும் சென்னை யிலிருந்து மட்டுமே 500 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.