சென்னை:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, 106 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாளை சென்னை வருகிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு 106 நாட்களுக்கு பிறகு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், டிசம்பர் 04ந்தேதி சிறையில் இருந்து வெளியே வந்தார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், மத்தியஅரசின் பொருளாதார கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில், நாளை (சனிக்கிழமை) அவர் சென்னை வர உள்ளதாக
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்து உள்ளார்.

நாளை மாலை 3மணி அளவில் சென்னை விமான நிலையம் வரும் சிதம்பரத்துக்கு பெரும் வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளவர், நாளை மாலை 4 மணி அளவில் சிதம்பரம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்திப்பார் என்றும், அப்போது, அவர் முக்கிய தகவல்களை தெரிவிக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்.

மேலும், வரும் 8ந்தேதி சிதம்பரம், திருச்சிக்கு விமானத்தில் சென்று, அங்கிருந்து, அவரது சொந்த ஊரான சிவகங்கை செல்வார் என்றும் தெரிவித்துள்ளார்.