பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 6 பேருந்து நிலையங்களுக்கு 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.

வெளியூர் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே.நகர் ஆகிய 6 பேருந்து நிலையங்களில் இருந்து புறப்படும் என்பதால் இந்த பேருந்து நிலையங்களுக்கு வரும் பொதுமக்களுக்காக கூடுதல் சேவைகள் இயக்கப்படுகிறது.

சென்னையின் எண்ணூர், மாதவரம், அம்பத்தூர், ரெட் ஹில்ஸ், பிராட்வே, திருவான்மியூர், திருவொற்றியூர், தி.நகர், தாம்பரம், வேளச்சேரி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட அனைத்து முக்கிய சந்திப்புகளில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே.நகர் ஆகிய 6 பேருந்து நிலையங்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

12-1-2024 முதல் 14-1-2024 வரை மூன்று நாட்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது, தவிர வெளியூரில் இருந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக 17-1-2024 மற்றும் 18-1-2024 ஆகிய இரண்டு தினங்கள் மாலை மற்றும் இரவு நேரத்தில் கூடுதலாக 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் 19-1-2024 அதிகாலை 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.