கட்டுரையாளர்: துரை நாகராஜன்

நான்கு வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை மத்திய அரசு மதிக்காததால் காலாவதியாகிவிட்டது.

தமிழகத்துக்கு காவிரி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டுமென்ற, இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு காவிரி மேலாண்மை வாரியத்துக்கா கட்டுப்படப் போகிறது?

இந்தக் கேள்விக்கு விடைதெரியாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும். இல்லையேல் தீக்குளிப்பேன் என்று வாய்ச்சவடால் விடுவதும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன் என்பதும், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவதும், உண்ணாவிரதத்துக்கு நாள் குறிப்பதும் என்ன பலனை தந்துவிடப் போடுகிறது?

மத்திய நீர்வளத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக் கூடியது காவிரி மேலாண்மை வாரியம். இந்த வாரியத்துக்கு ஒரு முழுநேரத் தலைவர், இரண்டு முழுநேர உறுப்பினர், நான்கு தொழில்நுட்ப வல்லுநர்களை மத்திய அரசு நியமிக்கும். நதிநீரை பங்கிட்டுக்கொள்ளும் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் தலா உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் கூடி கலந்துபேசி நீர்பங்கீடு குறித்து முடிவு எடுப்பார்கள். உறுப்பினர்களின் பெரும்பான்மை அடிப்படியில் முடிவுகள் செயல்படுத்தப் படும்.

வாக்கெடுப்பு என வரும்போது,  கர்நாடகா தண்ணீர் தரமறுத்தாலும் மற்ற மூன்று மாநில உறுப்பினர்களும் தண்ணீரை விடவேண்டும் என்றே வாக்களிப்பார்கள். கர்நாடகாவின் குரல் எடுபடாமல் போகும். எனவேதான் இந்த வாரியம் அமைந்துவிடக் கூடாது என்பதில் கர்நாடகா தீவிரமாக இருக்கிறது.

கர்நாடகாவின் எதிர்ப்பையும் மீறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டாலும் அதற்கு, சட்டரீதியாக என்ன அங்கீகாரம் இருக்கப்போகிறது? காவிரி மேலாண்மை வாரியத்தின் முடிவை செயல்படுத்த கர்நாடகா மறுத்தால் வாரியம் என்ன செய்யும்? உச்சநீதி மன்றத்தின் முன்னால்தான் போய் நிற்கவேண்டும்.

மறுபடியும் நீதிமன்றத்தின் படிக்கட்டை மிதிக்க ஒரு வாரியம் அமைக்கப்படுவது அவ்வளவு அவசியமா என்ன? ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பை செயல்படுத்த முடியாத நீதிமன்றம், புதிதாக வாரியம் அமைக்க காலக்கெடு விதிக்கிறது. அந்தக் காலக்கெடுவை மத்திய அரசு கிடப்பில் போடுகிறது. இத்தனை இயலாமைகளைத் தாண்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டாலும் அது எந்தவிதமான நீதியை தமிழகத்துக்கு பெற்றுத் தந்துவிடும்?

வரும் மே மாதம் கர்நாடக மாநிலத்துக்கு தேர்தல் வரவிருக்கிறது. ஆளும் காங்கிரஸ் அரசும், ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக அரசும் கர்நாடக மக்களிடம் தமிழகத்துக்கு ஒரு சொட்டு நீரைக்கூட தரமாட்டோம் என்று சொல்லித்தான் வாக்கு சேகரிக்கப் போகிறது. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழர்களுக்கு எப்படி நியாயமாக நடந்து கொள்ளும்?

ஆளும் பாஜக அரசு மட்டுமல்ல,  ஆண்ட காங்கிரஸ் அரசும் காவிரி நீர்பங்கீடு விஷயத்தில் தமிழகத்தை வஞ்சிக்கவே செய்தது. திராவிடக் கட்சிகளின் எழுச்சியால் காங்கிரஸை தமிழகத்தை விட்டு வெளியேற்றி விட்டதும், பாஜகவை இன்னும் தமிழகத்துக்குள் நுழையவே விடாததும் இந்த வஞ்சிப்புக்கு காரணம்.

தங்களைப் புறக்கணித்ததால் தேசியக் கட்சிகள் தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை. தமிழைச் சொல்லி வளர்ந்த திராவிடக் கட்சிகளும் தமிழர் நலனில் அக்கறை கொள்ளவில்லை. நாம் திராவிடத்தால் வீழ்ந்தோம்.

அணு உலைகளும், ஹைட்ரோ கார்பன் திட்டமும், மீத்தேன் வாயுத்திட்டமும், நீட் தேர்வும், ஸ்டெர்லைட் ஆலையும் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்பை மீறி தமிழகத்துக்குள் நுழைந்த போது நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்? எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு இல்லை என்ற நிலை உருவானபோதும் வாய்மூடியே கிடந்தார்கள்.

பிறகு எதற்கு மத்தியில் 37 உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்கிற பெருமையும்? இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களை கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு உரிமையிலும் கோட்டை விட்டுக் கொண்டிருக்கும் நம்மால், தமிழக விவசாயிகளின் வாழ்வா தரத்தை காப்பாற்ற காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்குக் கூட அழுத்தம் கொடுக்க முடியாது என்றால் எதற்காக அந்தப் பதவி?

காலம்தாழ்ந்தி தண்ணீர் தந்தான் என்பதற்காக தண்ணீரே பருகாமல் உயிர்விட்ட நம் முன்னோன் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை வரலாற்றை பாடங்களில் படித்திருக்கிறோம். காலம் தாழ்த்திகூட  இல்லை, தரவே மாட்டோம் என்று சொன்னபிறகும் நாம் மத்தியில் ஒட்டிக்கொண்டு இருக்கிறோம் என்றால் எதை சாதிக்க? அல்லது எந்தக் குற்றத்தை மூடி மறைக்க?

மத்திய அரசும், மாநில அரசும் தமிழர் நலன்களை முழுதாக கைவிட்ட நிலையில் தமிழக மக்களும், விவசாயிகளும் காவிரியில் தண்ணீர் வருமா? வராதா என்ற கேள்வியை சுமந்தபடி இருக்கின்றனர். காவிரியில் தண்ணீர் கொடு அல்லது தனிநாடு கொடு என்று குரல் எழுப்ப வெகுநேரம் ஆகாது. இந்த நாட்டின் இறையாண்மையின்மீதும், நீதிமன்றத்தின் மீதும் இன்னும் நம்பிக்கை இழக்காதவர்களாக இருக்கிறார்கள்.

ஒரு ஜனநாயக நாட்டை கட்டுப்படுத்தும் மாபெரும் சக்திமிக்கது சட்டத்தை நிலைநாட்டும் நீதிமன்றங்கள்.  உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்குகிறது. அதை  ஒரு அரசாங்கம் மீறுகிறது. அந்த அவமதிப்பை  உச்ச நீதிமன்றம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.

உச்சநீதிமன்றத்துக்கு தன்னுடைய தீர்ப்பு செயல்படுத்தப் படவேண்டும் என்ற எண்ணம் உண்மையிலேயே இருந்திருக்குமானால், ராணுவ உதவியுடன் தண்ணீரைத் திறந்துவிட்டிருக்க முடியும். அல்லது, சட்டத்தை மதிக்காத அரசு நாட்டை ஆளும் தகுதியை இழக்கிறது என்று ஆட்சியை கலைத்திருக்க முடியும். அப்படி எதுவும் செய்யவில்லை.

எதிர்வரும் கர்நாடக தேர்தலை மனதில் வைத்து பாஜக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்துகிறது. கெடுவிதித்த உச்சநீதிமன்றம் எதற்காக மௌனமாக இருக்கிறது?

இதற்கான காரணம் தெரியாமல் வாரியம் அமைத்து என்ன செய்யப்போகிறோம்?