சென்னை: மரபை மீறியது சபாநாயகர்தான், ஆளுநர் கிடையாது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார். சாவர்க்கர், கோட்சே குறித்தெல்லாம் பேசி சபாநாயகர் தான் மரபை மீறி செயல் என்று விமர்சனம் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர்  என்பதால், இன்று ஆளுநர் உரையுடன் தான் தொடங்கியது.  கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையை படிக்காமல் பாதியிலேயே அவையிலிருந்து வெளியேறி சர்ச்சையை கிளப்பிய ஆளுநர். இந்த முறையும் ஆளுநர் உரையை முழுவதும் படிக்காமல் ஓரிரு பத்தியை வாசித்துவிட்டு அமர்ந்தார். மேலும், . அதுமட்டுமல்லாமல் தேசியகீதத்தை அவை தொடங்கும் போதும் முடிக்கும் போதும் இசைக்க வேண்டும் என்றும், உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதையடுத்து, ஆளுநர் உரையை சபாநாயகர்  அவையில் வாசித்தார். ஆளுநர் வாசிக்காவிட்டாலும் இந்த உரை அவைக்குறிப்பில் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் உரையை முழுவதும் வாசித்த பின்னர் சபாநாயகர் அப்பாவு சில கருத்துக்களை முன்வைத்தார்.

தேசிய கீதம் கடைசியில் தான் இசைப்பது என்பது மரபு என்று அப்பாவு கூறினார். ஆளுநர் கருத்து தெரிவித்ததால் நானும் சில கருத்துக்களை முன்வைக்கலாமா, தமிழ்நாட்டில் வெள்ளம், புயல் என்று பல சிரமங்களை சந்தித்துள்ளோம். மத்திய அரசிடம் பிஎம் கே ஃபண்டில் கணக்கு கேட்க முடியாத அந்த கணக்கில் பல லட்சம் கோடி இருக்கிறதே அதிலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒரு 50 ஆயிரம் கோடியை வாங்கிக் கொடுக்கலாமே.. சாவர்க்கர், கோட்சே வழியில் வந்த உங்களுக்கு குறைவானவர்கள் அல்ல தமிழகத்தில் உள்ளவர்கள் என்று அப்பாவு கூறினார்.

அடுத்த ஒரு சில நிமிடங்களில் தேசிய கீதம் இசைக்கப்பட இருந்த நிலையில் அதை பொருட்படுத்தாமல் ஆளுநர் வெளியேறினார்.

அவை கூட்டம் முடிவடைந்ததும், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,  மாநில அரசு தயாரித்துக் கொடுத்த உரையை தான் ஆளுநர் படிக்க வேண்டும். அதனால் சபாநாயகர் உரையை வாசித்தார். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் தனது கருத்தை தெரிவித்தார். இது மரபை மீறிய செயல் அல்ல. ஆனால் சாவர்க்கர், கோட்சே குறித்தெல்லாம் பேசி சபாநாயகர் தான் மரபை மீறிவிட்டார். அதற்கு நாங்கள் வன்மையாக எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்று கூறினார்.