சென்னை: மீண்டும் டிரோன் மூலம் கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

சென்னையில் கடந்த சில வாரங்களாக கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது.  மழைக்காலம் முடிந்து மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி உள்ளது. இரவு மட்டுமின்றி பகலிலும் கொச்சுத்தொல்லை உள்ளது. மாநகராட்சி வாகனங்கள் மூலம் தெருக்களில் கொசு ஒழிப்பு புகை செலுத்தினால், சாலையில் உள்ள கொசுக்கள், வீடுகளுக்குள் புகுந்துகொள்கிறது. இதனால்,  பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  இந்த நிலையில், கொசுக்களை ஒழிக்க டிரோன்களை பயன்படுத்தி  கொசு மருந்து அடிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

 பருவ காலம் தற்போது மாறி வரும் நிலையில் சென்னையில் கொசுக்கடி பாதிப்பும் பெருகியுள்ளது. பனியும் குளிரும் குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இனி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

கொசுக்கள் உற்பத்தியும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டால் சென்னை மக்களை கொசுக்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் இந்த பணியை இந்த மாதம் இறுதியில் தொடங்க அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர் இவற்றில் ‘டிரோன் மூலம் கொசு மருந்து அடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சிறிய கால்வாய்களிலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கப்பட உள்ளது. 6 டிரோன்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி அதிகாரிகள்,  மிச்சாங் புயல், மழையால் கொசு ஒழிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் இறுதியில் மீண்டும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. நீர்நிலைகளில் படகுகளில் சென்று குப்பைகளை அகற்றுதல், ஆகாய தாமரை அகற்றப்படும். சென்னையில் ஓடும் முக்கிய 3 நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படும்.

இதுதவிர 3,300 பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணி செய்யப்படுகிறது. வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும். மேலும் கொசுக்கள் உற்பத்தி யாகும் மழை நீர் கால்வாய்களில் அடைப்புகளை திறந்து கொசு மருந்து அடிக்கப்படுகிறது. வரும் நாட்களில் கொசுக்கள் இன்னும் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் அவற்றை தொடர்ந்து மருந்து அடிப்பதன் மூலம் ஒழிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.