சென்னை,
தமிழக சபாநாயகர் மீதான திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழக சட்டமன்ற சபாநாயகராக தனபாலே நீடிக்கிறார்.
தமிழக சட்டசபையில் எடப்பாடி அரசின் பெரும்பான்மை நிரூபிக்கும் கூட்டம் அன்று நடைபெற்ற அமளி காரணமாக எதிர்க்கட்சியினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அதையடுத்து சபாநாயகர் தனபாலை நீக்க கோரும் தீர்மானத்திற்கு நோட்டீஸ் திமுக தரப்பினரால் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று தீர்மானம் குறித்து வாக்கெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சபாநாயகர் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த தீர்மானம் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் சபையில் பேசினார். அதைத்தொடர்ந்து இதுகுறித்து விவாதம் நடைபெற்றது.
விவாதம் முடிந்ததும், சபாநாயகர் சபையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து துணை சபாநாய கர் பொள்ளாச்சி ஜெயராமன் சபையை வழி நடத்தினார்.
முதலில் சபாநாயகர் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்மீது குரல் வாக்கெடுப்பு நடை பெற்றது. அதில் தனபால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சி தலைவர் அதை ஏற்க மறுத்து, உறுப்பினர்களின் எண்ணிக்கை மூலம் வாக்கெடுப்பு நடத்த கோரினார்.
அதை ஏற்று துணைசபாநாயகர் எண்ணிக்கை முறையில் வாக்கெடுப்பு நடத்தினால். அதில் சபாநாயகர் தனபாலுக்கு ஆதரவாக 122 வாக்குகளும், அவருக்கு எதிராக 97 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மேலும் 13 சட்டமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வரவில்லை.
இதன் காரணமாக ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இன்றைய கூட்டத்தை ஓபிஎஸ் அணியை சேர்ந்த 12 சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணித்து விட்டனர். மேலும் திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சட்டசபைக்கு வர முடியாத நிலையில் உள்ளார். இந்த 13 உறுப்பினர்களும் இன்றைய வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் எந்த அணியையும் சாராத மைலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்ஏவான நட்ராஜ் ஐபிஎஸ் சபாநாயகருக்கு ஆதரவாகவே வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்மானம் தோல்வி காரணமாக தமிழக சட்டமன்ற தலைவராக தனபாலே நீடிக்கிறார்.
மேலும், திமுக உறுப்பினர்கள் மீதான உரிமைமீறல் பிரச்சினை குறித்த சபாநாயகரின் அதிரடி முடிவு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.