பெங்களூரு: கர்நாடகாவில் ஏற்கனவே 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்த சபாநாயகர் ரமேஷ் குமார், தற்போது மேலும் 14 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.

கடந்த வியாழன்று ஏற்கனவே 3 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்திருந்தார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை எடியூரப்பா தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்றது. மேலும், சபாநாயகர் மீது பாரதீய ஜனதா தரப்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், இன்று அதிரடியாக மேலும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்து அறிவித்துள்ளார் சபாநாயகர் ரமேஷ் குமார். இதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் 14 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்கள் 3 பேர்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் 14 பேரில் ஒருவரான ஸ்ரீமந்த் பாட்டில் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர்.

இந்த உறுப்பினர்கள் அனைவரும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தை மீறியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். எனவே, இவர்களின் அரசியலுக்கு தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவர்கள் விரைவில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் கலந்துகொள்ள இயலாது.

இவர்கள் இடைத்தேர்தலில் வென்றாலும், இந்த சட்டசபையின் ஆயுள் காலம் முழுவதும் அமைச்சர்களாக பதவியேற்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, அமைச்சர்களாகும் ஆசையில் பா.ஜ. பக்கம் தாவியவர்களின் பிழைப்பில் தற்போது மண் விழுந்துள்ளது.