டில்லி

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 18 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்கியது இந்தக் கூட்டம் .புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத் தொடரில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா விவாதத்துக்குப் பிறகு நிறைவேறியது.

சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றது குறித்து விவாதம் நடந்த போது பகுஜன் சமாஜ கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி குறித்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் மீண்டும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர், சர்ச்சைக்குரிய அந்த வார்த்தையைப் பயன்படுத்தி விமர்சித்ததற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுக்குத் தான் மன்னிப்பு கோருவதாக கூறினார். நாடாளுமன்ற உறுப்பினரின் சர்ச்சைக்குரிய பேச்சு அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது. இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இருப்பினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரியை அவையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தை மட்டும் அன்றி ஒவ்வொரு இந்தியனையும் அவமதித்து விட்டதாகக் கூறி உள்ளனர்.