நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அன்புமணி ராமதாசுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை வைத்துள்ளது.

சூர்யா நடிப்பில் தீபாவளியை ஒட்டி ஜெய்பீம் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது முதல் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறது.

உண்மை சம்பவம் என்ற பெயரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில், உண்மைக்கு மாறான தகவல்கள் ஆவணமாக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது.

மேலும், திரைப்படத்தின் ஒரு காட்சியில் வைக்கப்பட்ட குறியீடு வன்னியர் சமூகத்தை இழிவு படுத்துவதாக இருப்பதாக வன்னியர் சங்கம் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து படத்தில் இருந்து அந்த குறியீடு நீக்கப்பட்டது.

காட்சிகளில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், படத்தில் ஒருகுறிப்பிட்ட கதாபாத்திரத்திற்கு உண்மைக்கு மாறாக குரு என்று பெயரை வைத்ததைக் கண்டித்து காடுவெட்டி குருவின் மகன் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த சர்ச்சைகள் எல்லாம் ஓய்ந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து திடீரென விமர்சனம் செய்த பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.பி. அன்புமணி ராமதாஸ், இந்த திரைப்படம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி கடிதம் ஒன்றை நடிகர் சூர்யாவுக்கு அனுப்பியிருந்தார்.

தொடர்ந்து சூர்யா நடித்த திரைப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என்று பாமக நிர்வாகிகள் அறிவித்தனர்.

மயிலாடுதுறையில் சூர்யா நடித்த வேல் திரைப்படம் வெளியான திரையரங்கை பா.ம.க. வினர் நேற்று முற்றுகையிட்டனர் அப்போது பேசிய அம்மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி “நடிகர் சூர்யாவை எட்டி உதைப்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்” என்று பேசியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், வன்னியர் சங்கம் சார்பாக வழக்கறிஞர் கே. பாலு 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகர் சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சூர்யா குறித்து தொடர்ந்து விமர்சித்து வருவதை அன்புமணி ராமதாஸ் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா அரசியல், ஜாதி, மத பேதம் ஏதும் பார்க்காமல் தொண்டுள்ளத்தோடு பல்வேறு கல்விப்பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த மனிதர், அவரைப் பற்றி தேவையற்ற சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று அவர்கள் வெளியிட்டிருக்கும் கடிதத்தில் கூறியுள்ளனர்.

ஜெய்பீம் திரைப்படத்தில் வரும் சம்பவம் நடைபெற்ற காலத்தில் பாதிக்கப்பட்ட நபருக்காக முதலில் குரல் கொடுத்த பா.ம.க. பின்பு அரசியல் காரணங்களுக்காக தனது தீவிர ஆதரவை கைவிட்டு, அரசியலில் பாமக நிலையான கட்சியல்ல என்பதை அப்போது முதல் நிரூபித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் பா.ம.க. மீது விமர்சனங்களும் எழுந்து வருகிறது.