டெல்லி: தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை 10 கோடிக்கும் அதிகமானவர்களை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சீராகக் குறைய தொடங்கியுள்ளது.

பின்னர் பிரிட்டனில் இருந்து இந்தியாவில் உருமாறிய வைரஸ் பரவியது. தமிழகத்தில் ஒருவருக்கு இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கடந்த பல நாட்களாக இந்தியாவில் யாருக்கும் உருமாறிய வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந் நிலையில், தற்போது தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு இந்தப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா கூறி உள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தென்னாப்பிரிக்காவில் உருமாறிய வைரஸ் பாதித்த 4 பேர் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கிருந்து, இந்தியா திரும்பி வந்துள்ளனர். அவர்களுடன் பயணம் செய்த மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரேசிலில் உருமாறிய கொரோனாவினால் ஒருவர், பாதிக்கப்பட்டது  பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கண்டறியப்பட அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

வைரஸ் மாதிரிகள் தனியாக பிரிக்கப்பட்டு, புனேயில் உள்ள ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக முன் எடுக்கப்பட்டு வருகிறது. தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், பிரிட்டனில் உருமாறிய வைரசை விட வேறுமாதிரியானது என்று கூறினார்.