சிட்னி: உருமாறிய கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் பரவுவதையடுத்து, அந்நாட்டிற்கான டெஸ்ட் சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்திருப்பதால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை அந்த அணி இழந்துள்ளது.
இதன்மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆடுவதற்கு, இந்தியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, அணிகளுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது.
இதுகுறித்து கூறப்படுவதாவது; நியூஸிலாந்துக்கு அடுத்த ஜூன் மாதம் வரை எந்த டெஸ்ட் போட்டியும் இல்லை என்பதால், தற்போதுள்ள புள்ளியில்தான் (70%) நீடிக்க வேண்டியது இருக்கும்.
ஆனால், 430 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும், 412 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணியும் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்தான் யார் இறுதிக்கு முன்னேறுவார்கள் என்பதற்கான முக்கியத் தொடராக மாறும்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்லி கூறுகையில், “தென் ஆப்பிரிக்காவில் உருமாறிய கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் அங்கு ஆஸ்திரேலிய வீரர்கள் பயணம் செய்வது சாத்தியமில்லை.
அவ்வாறு ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் குழுவினர் தென்னாப்பிரிக்காவுக்குப் பயணிப்பது அவர்கள் உடல்நலத்துக்குப் பாதுகாப்பில்லாதது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆதலால், தென் ஆப்பிரிக்காவுடன் நடக்கும் டெஸ்ட் தொடர் ரத்து செய்யப்படுகிறது” என்றுள்ளார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் டிராவில் முடிந்தாலோ அல்லது இந்தியா தொடரை வென்றாலோ, தென்னாப்பிரிக்கத் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் பட்சத்தில் அல்லது டிரா செய்யும் பட்சத்தில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கத் தொடர் ரத்தானதால், அந்த வாய்ப்பு ஆஸ்திரேலியாவுக்குப் பறிபோயுள்ளது.