கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில், இன்னும் 160 ரன்களை எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இலங்கை அணி.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தினேஷ் சந்திமால் 85 ரன்களும், தனஞ்சயா டி சில்வா 79 ரன்களும், டாசன் ஷனகா 66 ரன்களும் அடித்தனர். நிரோஷான் டிக்வெல்லா 49 ரன்கள் அடிக்க, தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென்னாப்பிரிக்க தரப்பில் லுதோ சிபம்லா 4 விக்கெட்டுகளையும், வியான் மல்டர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், தனது இன்னிங்ஸைத் துவங்கிய தென்னாப்பிரிக்க அணியில், பாப் டூ பிளசில் 199 ரன்களை குவித்தார். வெறும் 1 ரன்னில் இரட்டை சத சாதனையை தவறவிட்டார்.

துவக்க வீரர் டீன் எல்கர் 95 ரன்களை அடித்து, 5 ரன்களில் சத வாய்ப்பை கோட்டைவிட்டார். டெம்பா பவுமா 71 ரன்களை அடிக்க, கேஷவ் மஹராஜ் 73 ரன்களை குவித்தார்.

எய்டன் மார்க்ரம் 68 ரன்களையும், வியான் மல்டர் 36 ரன்களையும் அடிக்க, தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 621 ரன்களைக் குவித்தது.

இலங்கை தரப்பில் வானின்டு ஹசரன்கா 4 விக்கெட்டுகளையும், விஷ்வா பெர்னான்டோ 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

முதல் இன்னிங்ஸில் 225 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில், அந்த அணி இன்னும் 160 ரன்களை எடுத்தாக வேண்டும்.