திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ‘சூரரை போற்று’ ஊரடங்கு காரணமாக இணையதளமான ஓ.டி.டி.யில் வரும் 12 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ், கன்னடம், மலையாளம்,தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் சூரரை போற்று வெளியாகும் நிலையில் அதன் ஹீரோ சூரியா அளித்துள்ள பேட்டியின் சுருக்கம் இது:
“ஓ.டி.டி.யில் சூரரை போற்று வெளியாவதால், எனது ‘இமேஜ்’ பாதிக்கப்படும் என நான் நினைக்கவில்லை. தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவம் தனி சுகம் தான்.
தியேட்டரில் வெளியிடுவதற்காகத்தான் இந்த படத்தை தயாரித்தோம். ஆனால் எவ்வளவு நாட்கள் பொறுத்திருப்பது?
தமிழ்நாட்டில் 10 ஆம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. வேறு சில மாநிலங்களிலும் திறக்க உள்ளனர். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் குறையவில்லையே?
இந்த சூழலில் எனது தாயாரை, மனைவியை நான் தியேட்டரில் சென்று படம் பாருங்கள் என்று சொல்ல மாட்டேன் அல்லவா? அப்படி இருக்கும் போது, எனது ரசிகனை நான் தியேட்டருக்கு போய் சினிமா பாருங்கள் என்று சொல்ல முடியுமா? அனைவரின் பாதுகாப்பு தான் முதலில் முக்கியம்” என விளக்கம் அளித்த சூரியா
“இந்த படம் உலகம் முழுவதும் 200 நாடுகளில் வெளியாகிறது” என்ற தகவலையும் தெரிவித்தார்.
– பா. பாரதி