‘என்.ஜி.கே’ படத்தைத் தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.

சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் குனீத் மோங்கா இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். நிகித் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

விமான சேவையை நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏர் டெக்கான் ஏர்வேஸ் நிறுவனத்தை நிறுவிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவியே இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுதா கொங்கரா.

இந்நிலையில் ‘சூரரைப் போற்று’ படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் ஜனவரி 7-ம் தேதி முதல் டீஸர் எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.