டில்லி
கொரோனா தொற்றால் உயிரிழந்த பெற்றோரின் குழந்தைகளுக்குக் கல்வி இலவசம் என அறிவிக்கப் பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
நாடெங்கும் இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிப்பு அதிகமாகி உள்ளது. சென்ற அலையைப் போல் இல்லாமல் தற்போதைய இரண்டாம் அலையில் பாதிப்பு மற்றும் மரண எண்ணிக்கை மிகவும் அதிக அளவில் உள்ளன. பல இடங்களில் குடும்பத்துக்கு ஊதியம் ஈட்டும் நபர் உயிர் இழப்பால் குடும்பங்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில குழந்தைகள் தாய் தந்தை இருவரையும் இழந்து வாடுகின்றனர்.
இவ்வாறு பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரம் ஒரு கேள்விக்குறி ஆகி உள்ளது. ஊடகங்களில் பலரும் இது குறித்து எழுதி இவ்வாறு பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை எழுப்புகின்றனர். தற்போதைய நிலையில் இந்தியாவில் இந்த பிரச்சினை கடுமையாக உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர், “கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் பல குழந்தைகள் இழந்துள்ளனர். மேலும் சம்பாதிக்கும் நபரின் மரணத்தால் பல குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர்
இவர்களின் எதிர்காலம் கேள்விக் குறி ஆகி உள்ளது. எனவே இந்த குழந்தைகளுக்குக் கல்வி இலவசம் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். கல்வியை மேம்படுத்த மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி நவோதயா பள்ளிகளை தொடங்கினார். கிராமப்புற மாணவர்களைக் கல்வியில் சிறந்தவர்களாக மாற்றும் கனவுடன் இவை உருவாக்கப்பட்டன.
தற்போது கொரோனாவால் பல பெற்றோர்கள் மரணம் அடைந்துள்ளதால் குழந்தைகளின் கல்வி தடைப் பட்டுள்ளது. இந்த குழந்தைகளை மத்திய அரசு முன்வந்து நவோதயா பள்ளிகளில் இணைக்க வேண்டும். இவர்களுக்குத் தடையற்ற கல்வி கிடைக்க அரசு உதவ வேண்டும்” எனக் கோரிக்கை எழுப்பி உள்ளார்.