ஹைதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தின் இரண்டாவது நாளான இன்று தெலுங்கானா மாநில மக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்ததும் மகளிருக்கு மாதம் ரூ. 2500 வழங்கும் ‘மகாலட்சுமி’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

தவிர, கேஸ் சிலிண்டர் விலை ரூ. 500 ஆக குறைக்கப்படும் என்றும் அரசுப் பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்படும் என்றும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

பெண்கள் தவிர, விவசாயிகளுக்கும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ள சோனியா காந்தி, விவசாய நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 15000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விவசாய கூலி வேலை செய்பவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 12,000 வழங்கப்படும் என்றும், நெல்லுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஆதார விலையுடன் குவிண்டாலுக்கு ரூ. 500 சேர்த்து வழங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியான துக்குகுடாவில் நடைபெறும் ‘விஜயபேரி’ கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சோனியா காந்தி இந்த உத்தரவாதங்களை அளித்தார்.

இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது ஆளும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு மக்கள் செல்வாக்கு சரிந்து வரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் முனைப்போடு காங்கிரஸ் கட்சி தீவிரமாக களமிறங்கியுள்ளது.