
சென்னை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் இன்று தமிழ்த்திரையுலகினர் நடத்திய “மவுன அறவழி போராட்டத்தில்” பல நட்சத்திரங்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சனைகளுக்காக தற்போது தமிழ்நாடு முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் தாங்களும் இப்போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்துக்கு திரையுலகினர் ஆளாகினர். ஆகவே, “மவுன அறவழி போராட்டம்” என்று அறிவித்து இன்று நான்கு மணி நேரம் நடத்தி முடித்தனர்.
“போராட்டத்தில் ஏதாவது பேசினால் கர்நாடகத்தில் தங்கள் படத்தை வெளியிட முடியாத நிலை ஏற்படலாம் என்பதால், மவுனப்போராட்டம் என்பது போல நடத்தி முடித்திவிட்டனர்” என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த போராட்டத்தில்கூட பல நடிகர், நடிகையர் கலந்துகொள்ளவில்லை என்பது ரசிகர்களை வருத்தமடைய வைத்துள்ளது.
ரஜினி, கமல், ஷங்கர், இளையராஜா ஆகிய முன்னணி திரையுலகினர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆனால் பிரபல நட்சத்திரங்களாக விளங்கிய மோகன், டி ராஜேந்தர், பாக்யராஜ், கார்த்திக் போன்றவர்களும் தற்போதும் திரைப்படங்களில் நடித்து வரும் அர்ஜுன், ரமேஷ் அரவிந்த் ஆகியோரும், விளம்பரப்படங்களில் தற்போது நடித்துவரும் பிரபுவும் இப்போராட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
அதேபோல் நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. மேலும் ராதா ரவியும் இந்த போராட்டம் பக்கம் தலைகாட்டவில்லை. பிரகாஷ்ராஜ், பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற நபர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அதே போல ராதா, அம்பிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக பொது விவகாரங்களில் குரல் கொடுக்கும் ராதிகா, குஷ்பு, ரேவதி போன்றவர்களும் இந்த போராட்டத்தை புறக்கணித்துள்ளனர். அதிலும் ராதிகா தமிழ், தமிழ் என்று முழங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இப்படி போராட்டத்தைப் புறக்கணித்தவர்களில் கணிசமானவர்கள் 80களில் பிரபலமாக இருந்தவர்கள். சமீபத்தில் இவர்கள் எல்லோரும் கூட கெட் டு கெதர் பார்ட்டி நடத்தினர். அதற்கு எல்லா நட்சத்திரங்களும் ஓடோடி வந்து கலந்துகொண்டனர். ஆனால் மக்கள் பிரச்சினை என்றால் ஒதுங்கிவிடுகின்றனர்” என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
[youtube-feed feed=1]