சென்னை:

சோமஸ்கந்தர் சிலை மோசடி வழக்கு தொடர்பாக  இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதாவை தமிழக அரசு கடந்த ஆண்டு பணியிடை நீக்கம் செய்துள்ள நிலையில், அவரது பணியிடை நீக்கம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழக கோவில்களில் உள்ள சிலைகள் திருடப்பட்டது, மாற்றப்பட்டது தொடர்பாக ஏராள புகார்கள் எழுந்த நிலையில், ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் தலைமையில் தனிப்படை அமைத்து  சென்னை உயர்நீதி மன்றம் விசாரணை நடத்தி வந்தது.

இதில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆயிரம் வருடங்கள்  பழமை வாய்ந்த சோமாஸ் கந்தர், ஏல்வார்குழலி சிலைகள் சேதமடைந்ததால்  அதற்கு பதிலாக  புதிய சிலைகள் செய்யப்பட்டன. இதில், மோசடி  நடைபெற்றிருப்பதாக கூறி, அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கடந்த ஆண்டு (2018)  ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையானார்.

இதையடுத்து அவரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று யானை ராஜேந்திரன் உயர்நீதி மன்றத்தை நாடியதை தொடர்ந்து, கடந்த ஆண்டு (2018)  அக்டோபர் 4ந்தேதி சென்னை உயர்நீதி மன்றம், கவிதாவை ஏன் சஸ்பெண்டு செய்ய வில்லை என்று தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, அக்டோபர் 10ந்தேதி கவிதாவை இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

தமிழக அரசின் சஸ்பெண்டு உத்தரவை எதிர்த்தும்,   தன்னை மீண்டும் பணியமர்த்த கோரி கவிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,  நிதி முறைகேட்டுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும், 90 நாட்கள் கடந்தும், தனக்கு எதிராக எந்தக் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யாததால், தொடர்ந்து தன்னை பணியிடை நீக்கத்தில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பார்த்திபன், கவிதா கைது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்வதற்காக, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர், சிவகாஞ்சி ஆய்வாளர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்த்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி விசாரணையின்போது உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து வழக்கு மீண்டும் நீதிபதி பார்த்திபன் முன்பி விசாரணைக்கு வந்தது. அப்போது,   இது அரசிற்கும் மனுதாரருக்கும் இடையேயான விவகாரம் எனவும், இதில் சிறப்பு அதிகாரியை தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டிய அவசியமில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, உயர்நீதிமன்றத்தின் வாய்மொழி உத்தரவை காரணம் காட்டி,  இந்து சமய அறிநிலை யத்துறை கூடுதல் ஆணையர் கவிதா மீதான வழக்கு ஆவணங்களை சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தர மறுப்பதாகவும், இதனால் துறை ரீதியான விசாரணை நடத்த முடியவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு தன் வசம் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் முடிவெடுக்கும்படி அரசு தரப்புக்கு அறிவுறுத்திய நீதிபதி, கவிதாவின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு மற்றும் மனுதார்களின் வாதங்களைத் தொடர்ந்து,  கவிதாவின் பணியிடை நீக்க உத்தரவை நான்கு வாரங்களில் மறு ஆய்வு செய்து முடிவெடுக்கும்படி தமிழக அரசுக்கு நீதிபதி வி.பார்த்திபன் உத்தரவிட்டார்.