சென்னை: தமிழக தலைநகருக்கான மிகப்பெரிய நீர் ஆதாரங்களுள் ஒன்றான செங்குன்றம் நீர்த்தேக்கப் பகுதியில், பெண் தொழில்முனைவோருக்கான மிகப்பெரிய தொழிற்பூங்காவை கட்டுவதற்கு திட்டமிடுகிறது தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சென்னையின் மிக முக்கிய நீராதாரங்களுள் ஒன்றான செங்குன்றம்(புழல்) நீர்த்தேக்கத்தில் 53 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா ஒன்றை அமைப்பது தொடர்பாக, நிலத்தை மறுவகைப்பாடு செய்ய வேண்டி, சென்னைப் பெருநகர மேம்பாட்டு ஆணையத்திடம் ஆகஸ்ட் 3ம் தேதி விண்ணப்பம் செய்துள்ளது தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகம்.

சமீப ஆண்டுகளில் சென்னை நகரம் கடும் தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்பட்டுவரும் நிலையில், அரசு அமைப்பு ஒன்றின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புழல் நீர்த்தேக்கம் என்றழைக்கப்படும் செங்குன்றம் நீர்த்தேக்கம் 4500 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் நீர்க் கொள்ளளவு 3300 மில்லியன் கியூபிக் அடி. வறட்சி காலங்களில்கூட இந்த நீர்த்தேக்கம் சென்னைக்கு தண்ணீர் வழங்கவல்லது.

ஆந்திராவின் கிருஷ்ணா நதியிலிருந்து வரும் நீர், இந்த நீர்த்தேக்கத்தில்தான் சேமிக்கப்படுகிறது. எனவே, இந்த நீர்த்தேக்கப் பகுதியில் அமைக்கப்படும் எந்தக் கட்டுமானமும், நீர் சேமிப்பு அளவை பாதிப்பதோடு, மழைநீர் இங்கே வந்தடைவதையும் பாதிக்கும். மேலும், தேவையற்ற வெள்ளப்பெருக்கும் உண்டாகும் என்று கூறப்பட்டுள்ளது.