சென்னை: அரசுஅலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மின்சாரத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், சூரிய ஒளி மூலம் பெரிய அளவில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை துரிதப்படுத்த, மத்திய அரசு, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது. இதற்கான திட்டங்கள் கடந்த 2010ம் ஆண்டு முதல் தீவிரப் படுத்தி வருகிறது.  சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை நாடு முழுவதும் பரவலாக்கும் நடவடிக்கை குறித்து,  ஆலோசனைகள் நடத்தி,  சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் திட்டங்களுக்கான வழிமுறைகளை அறிவித்தது.

ஜவகர்லால் நேரு சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் என்ற பெயரில், அதற்கான முதற்கட்ட ஆலோசனை நடத்தும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து வந்தது. அதன்படி இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள், 1,000 மெகாவாட் மின்சாரத்தை சூரிய ஒளி மூலம் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகைளை தீவிரப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் வீடுகள்,  தொழிற்சாலைகள், நிறுவனங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இவை சீராக  இயங்குவதற்கு மின்சாரத்தின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இதனால் ஆண்டுதோறும் புதிய மின்இணைப்புகளை பெறுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதாவது, கடந்த 2021ம் ஆண்டில் தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 3.16 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் இருந்தன. இதேபோல் உயர் அழுத்த பயனீட்டாளர்கள் பிரிவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மின் பயனீட்டாளர்கள் இருந்தனர். இது நடப்பாண்டில் மேலும் அதிகரித்துள்ளது.

அதாவது நடப்பு 2022ம் ஆண்டு தாழ்வழுத்த பிரிவில் மின் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 3.24 கோடியாக அதிகரித்துள்ளது. இதேபோல் உயரழுத்த பிரிவில் மின் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை 10,417 ஆக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்த மின்நுகர்வின் அளவும் அதிகரித்துள்ளது. அதாவது 2021-22ம் ஆண்டுக்கான அதிகபட்ச மின்தேவையின் அளவு 17,196 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.

இதனை பூர்த்தி செய்ய தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தலைமையிலான அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அனல், காற்றாலை, சூரியசக்தி, நீர் மின்நிலையங்களை மின்வாரியம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் மின்  பயன்பாட்டால் வரும் 10 ஆண்டுகளின் தமிழகத்தின் மின் தேவை ஏறத்தாழ 24,000 மெகாவாட்டை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் புதிய  மின்உற்பத்தி திட்டங்களை செயல்படுத்துவதில் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. இதிலும் குறிப்பாக சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத  சூரியசக்தி, காற்றாலை, நீர் மின்நிலையங்களை அதிகமாக அமைக்க திட்டம்  வகுக்கப்பட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரியசக்தி மின்உற்பத்தி தகடுகளை அமைத்து, அதன்மூலம் மின்உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி தமிழ்நாடு சூரிய  மின்சக்தி உற்பத்தியில் 5,303.50 மெகாவாட் நிறுவு திறனுடன் நாட்டிலேயே நான்காமிடத்தில் உள்ளது. 2021-22ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்கு 6,436.71 மில்லியன் யூனிட்டுகள் சூரிய மின்சாரம், சூரிய மின் உற்பத்தியாளர்கள் மூலம்  பெறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக தமிழகத்தில் 4,000 மெகாவாட் திறனுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் 2,000 மெகாவாட் திறனுள்ள மின்கலன் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் நிலங்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. இதேபோல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.