மும்பை: எதிர்வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கவுள்ள 14வது ஐபிஎல் தொடரில், ‘சாப்ட் சிக்னல்’ அவுட் முறையை நீக்கியுள்ளது பிசிசிஐ.

இந்நிலையில், 14வது ஐபிஎல் தொடருக்கான புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டன. அதன்படி, ‘சாப்ட் சிக்னல்’ முறையில் அவுட் கொடுக்கப்படுவது நீக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரில், ஷ்ரேயாஸுக்கு அவுட் கொடுக்கப்பட்ட முறை கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரீபிளேயில், பந்து தரையில் பட்டபின்னர் எடுத்தது நன்றாக தெரிந்தும், கள நடுவர் அவுட் கொடுத்த காரணத்தால், மூன்றாவது நடுவர் அதை மாற்றுவதற்கு மறுத்துவிட்டார்.

எனவ‍ே, இந்தத் தொடரில், அந்த சர்ச்சைக்குரிய நடைமுறையை நீக்கியுள்ளது பிசிசிஐ.

மேலும், ஒரு இன்னிங்ஸ்க்கான நேரத்திலும் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தமாக 20 ஓவர்களும் 90 நிமிடங்களுக்குள் வீசி முடிக்கப்பட வேண்டும். இதுவரை, 20வது ஓவரை 90வது ஓவரிலோ அல்லது அதற்கு முன்னதாகவோ தொடங்கலாம் என்றிருந்தது. ஒரு மணிநேரத்தில், 14.11 ஓவர்கள் வீசப்பட்டிருக்க வேண்டும்.