சித்தன்னவாசல் மற்றும் ஓணம்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சமண தொல்லியல் சின்னங்களை பாதுகாக்கக் கோரி சமண மத்தத்தைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

அஹிம்சை நடை எனும் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் கனகா அஜிததாஸ், ராஜேந்திரன் பிரசாத் மற்றும் ஆடிட்டர் அப்பாண்டை ஆகியோர் இந்த மனுவை அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசல் சமண தொல்லியல் சின்னத்திற்கு அருகில் கல் குவாரி அமைக்க, உரிமம் கோரி அரசிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து, உரிமம் வழங்கினால் தொல்லியல் சின்னத்திற்கு ஏற்படும் அழிவையும் சுட்டிக்காட்டி அனுமதி மறுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள ஓணம்பாக்கம் சமண சின்னத்தை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க முடிவாணை வழங்கவும், மலைக்கு செல்ல பாதை அமைத்து, வழி காட்டிப் பலகைகள் வைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சித்தன்னவாசல் சமண தொல்லியல் சின்னங்கள் மற்றும் ஓணம்பாக்கம் சமண சின்னங்கள் சம்பந்தமாக மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் ஆணைய உறுப்பினர் மற்றும் செயலர் ரவிச்சந்திரன், இ.ஆ.ப., ஆகியோரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு ஆவன செய்வதாக உறுதியளித்துள்ளனர்.