கரூர்: சட்டவிரோதமாக கல்குவாரி செயல்படுவதை தடுக்க வலியுறுத்திய விவசாயி ஜெகநாதன் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவரது மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய சமூக போராளி முகிலன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தென்னிலை, சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு குவாரிகள் அரசு அனுமதி இல்லாமலும் மற்றும் அனுமதி முடிந்தும் கனிம வளங்களை வெட்டி எடுத்து வருகிறது. தென்னிலை அருகே உள்ள காளிபாளையத்தில் செல்வ குமாருக்கு சொந்தமான தனியார் (அன்னை) கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிக்கு அருகாமையில் ஜெகநாதன் என்பவருக்கு சொந்தமாக விவசாய நிலம் அமைந்துள்ளது
செல்வகுமார் என்பவரின் கல்குவாரிக்கு கடந்த 2015ம் ஆண்டு அனுமதி முடிந்த நிலையில் தொடர்ந்து, அரசியல்வாதிகள் ஆதரவுடன், அரசு அனுமதி பெறாமல் கல்குவாரியை செயல்படுத்தி வந்தனர். இதுதொடர்பாக புகார் அளித்தும், காவல்துறையும், சம்பந்தப்பட்ட துறையும் நடவடிக்கை எடுக்காததால், விவசாயி ஜெகநாதன் போராட்டம் நடத்தி வந்தார். மேலும், அவருக்கு ஆதரவாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனும், கனிம வளத்துறைக்கு பல்வேறு புகார் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காத கனிமவளத்துறையினர், புகார் தொடர்பாக கல்குவாரி முதலாளிக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், பிரச்சினை பெரிதானதால், வேறு வழியின்றி, செல்வகுமாருக்கு சொந்தமான அன்னை கல்குவாரி மூடப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த கல்குவாரி உரிமையாளர், கூலிப்படையை ஏவி, ஜெகநாதனை கொலை செய்தார். சம்பவத்தன்று, க.பரமத்தி அருகே காருடயம்பாளையம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜெகநாதன் மீது தனியார் கல்குவாரிக்கு சொந்தமான பொலிரோ வேன் மோதியது. இதில் ஜெகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக க.பரமத்தி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விபத்து வழக்காக பதிவு செய்ய காவல்துறை முயன்றனர். இதற்கு அந்த பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும், ஜெகநாதனை, கல் குவாரி உரிமையாளர் வேன் ஏற்றி கொன்று விட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். அதைத்தொடர்ந்து சட்ட விரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் வழக்கறிஞர் குணசேகரன், முகிலன், சண்முகம் உள்ளிட்டோர் உயர் காவல்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து க.பரமத்தி காவல்துறையினர் கொலை வழக்காக முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், கல்குவாரி வேன் ஓட்டுனர் சக்திவேல் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விஷயத்தில் காவல்துறையினர் நேர்மையுடன் செயல்பட்டு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயி ஜெகநாதன் குடும்பத்தாருக்கு அரசு நிதி உதவி வழங்க வேண்டும். இதேபோல் கனிம வளங்கள் சட்டவிரோதமாக கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சமூக ஆர்வலர்கள் முகிலன், குணசேகரன் உள்ளிட்டோர் காவல்துறையினரிடம் மனு கொடுத்தனர். ஆனால், இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, இன்று கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் கொலையை கண்டித்து, அவரது உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.
காவல்துறையினரின் மெத்தனத்தை கண்டித்தும், சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் தலைமையில் சமூக ஆர்வலர்கள் இன்று 5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்களுடன் போராடினார். கொல்லப்பட்ட விவசாயி ஜெகநாதனுக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்கினால் மட்டுமே உடனே எடுத்துச் செல்லப்படும் என்று சமூக ஆர்வலர் கூறினர்.
இதன் காரணமாக அந்த இடத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்படையும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சமூகஆர்வலர் முகிலனை கைது செய்து வாகனத்திற்கு போலீசார் குண்டுககட்டாக தூக்கி சென்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்படுத்தியது.
சமூக ஆர்வலரான மறைந்த விவசாயி ஜெகநாதன் கடந்த 2019 ஆம் ஆண்டும், குவாரி உரிமையாளர்களால் கூலி படை ஏவி கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், அப்போது அவர் அரிவாள் வெட்டுடன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று உயர் பிழைத்தார். அந்த வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.