சென்னை: அதிமுக அலுவலக மோதல் தொடர்பாக  அலுவலக மேலாளரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் கடந்த ஜூலை 11-ம் தேதி சூறையாடப்பட்ட விவகாரம் குறித்து நீதிமன்றத்தின் உத்தரவைம் தொடர்ந்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கை  சிபிசிஐடி போலீஸார்  செப்டம்பர் 7ந்தேதி முதல்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டு கலவரமாக மாறியது. பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் காவல்துறையில் புகார் அளித்தார்.  அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான நான்கு வழக்குகளையும், சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்தது, 7ந்தேதி காலை திடீரென  அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து அங்கு ஆய்வு செய்து  விசாரணை நடத்தினர். குறிப்பாக அந்த அலுவலகம் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி கேமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் அடுத்தக்கட்டமாக அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று சிபிசிஐடி அலுவலகத்தில் மகாலிங்கம் ஆஜரானார். அவரிடம் காவல்துறையினர் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம் நடைபெற்ற விசாரணை முடிவடைந்து, மதியம் அவர் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது,  அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டதாக தெரிவித்தார்.