ஒரு சினிமா இயக்குநர் அப்படி… ஒரு பத்திரிகை ஆசிரியர் இப்படி!

Must read

நெட்டிசன்:  பத்திரிகையாளர் டி.வி.எஸ். சோமு,  “மனிதர்களில்தான் எத்தனை வகை…!” என்ற தலைப்பில் எழுதிய முகநூல் பதிவு:
 
1
மூத்த திரைப்பட இயக்குநர் ஒருவரிடம் உதவி இயக்குநராக இருந்த எனது நண்பர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தொலை பேசினார்.
கரகர குலில் “மனிதம்” பேசும் அந்த இயக்குநரிடம், துணை இயக்குநராக பணி புரிந்த அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

நல்ல பசி வேளையில் உதவி இயக்குநர்களை ஹோட்டலுக்கு அழைத்துப் போவாராம் அந்த இயக்குநர். பசியில் தவிக்கும் இந்த துணை இயக்குநர்களும், “ஆகா.. ஒரு கட்டு கட்ட வேண்டும்” என்று நினைப்பாராம்.
நட்சத்திர உணவகத்துக்குச் சென்று உட்காரந்தவுடன், “எனக்கு ஒரு காப்பி போதும்..… உங்களுக்கு என்ன வேணுமோ வாங்கிக்குங்க” என்றாராம் இயக்குநர்.
இயக்குநரே காப்பி சாப்பிடும் போது, துணை இயக்குநர் அரைக்காபி சாப்பிடுவதுதானே சினிமா நடைமுறை… ஆகவே, “எனக்கு ஒண்ணும் வேணாம் சார்” என்பார்களாம் உ. இயக்குநர்கள்.
இயக்குநரும் எந்தவித சங்கோஜமும் இன்றி தான் மட்டும் காபி சாப்பிட்டு, வாயைத் துடைத்துக்கொண்டு கிளம்ப…. இவர்கள் பசித்த பூனைக்குட்டிகளாய் பின் தொடர்வராம்.
அந்த இயக்குநரின் ஸ்டைலே (!) இதுதானாம்.
“மனித உணர்வுகளை நுணுக்கமாய் படம் எடுக்கிற அந்த இயக்குநருக்கு, பசித்த முகத்தை அறிய முடியாதா” என்று ஆதங்கப்பட்டார் நண்பர்.
அவர் சொன்னதை கேட்டதும் அமரர் சாவி சாரைப் பற்றிய நினைவுதான் எனக்கு வந்தது.
சாவி வார இதழில் உதவியாசிரியராக நான் பணியாற்றியபோது (1997) , ஒரு முறை பாண்டிச்சேரி சிறப்பிதழுக்காக சென்றோம்… ஜராசு சார், முகுந்தன் சார், ராணிமைந்தன் சார் ஆகியோருடன்…
ஓட்டலில் சாப்பிடும்போது நான் சங்கோஜப்பட்டுக்கொண்டு குறைவாகவே சாப்பிட்டேன். என் வயதை ஒத்த டிரைவர் ஆனந்தும் அப்படியே.
“வயசுப் பசங்க நல்லா சாப்பிடணும்” என்றெல்லாம் சாவி சார் ஏதேதோ சொல்லியும், நாங்கள் கேட்கவில்லை.
உடனே சாவி சார், “இனிமே இவங்க ரெண்டு பேரையும் சாப்பாட்டு சமயத்துல கூட்டு சேர்க்கக் கூடாது. இவங்களும் சரியா சாப்பிடல.. நமக்கும் சாப்பாடு இறங்கலை” என்றார் சிரித்தபடியே.
அதன் பிறகு பாண்டிச்சேரியில் தங்கிய மூன்று நாட்களும், “நல்லா சாப்பிடணும்” என்று சொல்லி, என்னையும் ஆனந்தையும் தனி டேபிளுக்கு அனுப்பிவிடுவார் சாவி சார்.
மனிதர்களில்தான் எத்தனை வகை…

More articles

Latest article