சென்னை: தமிழகத்தில் இதுவரை ஜிகா வைரஸ் கண்டறியப்படவில்லை என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
கொரோனாவைத் தொடர்ந்து கேரள மாநிலத்தை ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகிறது. தற்போதைய நிலையில், அங்கு ஜிகா வைரஸ் பாதிப்பு 28 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளாவை மட்டுமல்லாது தமிழகத்திலும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இதையடுத்து, கேரள மற்றும் தமிழக எல்லையில் ஜிகா வைரஸ் சோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. கேரள எல்லையில் தமிழகஅரசு சுகாதார ஊழியர்களை பணியமர்த்தி கண்காணித்து வருகிறது. மேலும், எல்லை பகுதிகளில் உள்ள மக்களிடம் ஜிகா வைரஸ் சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை, தமிழக கேரள எல்லைகளில் தீவிரமான கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளார்.