தமிழ்நாட்டில் இதுவரை 9,38,82,099 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன! சுகாதாரத்துறை தகவல்…

Must read

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 9,38,82,099 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்றும், மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழகத்தில் 3½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துஉள்ளது.

இதுகுறித்து,  தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை வெளியியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டாவியா தலைமையில் காணொலி மூலம் கொரோனா தற்போதைய நிலை, தேவையான மருத்துவக் கட்டமைப்பு, தடுப்பூசி ஆகியவை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் தயார் நிலையில் உள்ள மருத்துவக் கட்டமைப்பு, தடுப்பூசி நிலை ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் மொத்த மக்கள்தொகையில் 18வதுக்கு மேல் 5.78 கோடி நபர்கள் உள்ளனர். தமிழகத்தில் 9,38,82,099 தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. மேலும் 18 வயதுக்கு மேலுள்ள தகுதியுள்ள நபர்களில் 89.83 சதவீத நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 67.30 சதவீத நபர்களுக்கு 2-வது தவணைகளும் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 19 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு 3,46,94,487 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயதுக்குள்ளான 33,46,000 நபர்களில் 25,87,878 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட வயதுக்குட்பட்டவர்களில் 77.34 சதவீத நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. 3,31,187 நபர்களுக்கு 3-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக 663 சுகாதார மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் வாரந்தோறும் வியாழக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று 20-வது தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பலர் பங்கேற்று தடுப்பூசிகளை எடுத்து வருகின்றனர்.

More articles

Latest article