சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழ்நாடு அரசு பெண்களுக்கு மாதந்தோறும் வழங்கி வரம் மகளிர் உரிமைத் தொகை வழங்க தடையில்லை என்று கூறினார்.
தலைமைச்செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் சாகு, தமிழ்நாடு அரசு, பெண்களுக்கு வழங்கி வரும், மகளிர் உரிமை தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என தெளிவுபடுத்தினார். அரசு தொர்ந்து வரும் திட்டங்களுக்கு தடையில்லை என்று கூறியவர், அந்த பணிகள் தொடரலாம் என தெரிவித்தார்.
மேலும், மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது என கூறியவர், ஏப்ரல் 13ந்தேதிக்குள் பூத் சிலிப் வழங்கும் பணி முடிக்கப்படும், அதாவது நாளைக்குள் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு இந்த முறை 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை ரூ.305.74 கோடியை வருமானவரித்துறை கைப்பற்றி உள்ளது என்று கூறியவர், நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் மாற்றப்படுவதாக வரும் செய்திகள் உண்மை இல்லை. நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்ட மைக் சின்னம் தான் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது என தெளிவு படுத்தினார்.
மேலும், நீலகிரி மாவட்ட ஆட்சியர்மீதான புகார் குறித்து விளக்கம் அளித்தவர், நீலகிரியில் வேட்பாளரின் செலவு கணக்கை குறைத்து காட்ட சொன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பார்வையாளர் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றார்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த பணிகளை தேர்தல் அதிகாரிகள் செய்து வருகிறார்கள் என்றும் கூறினார்.