சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு தற்போது வரை 20.53 லட்சம் பேர்  பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். கடைசி நாளான நேற்று மட்டும் 3லட்சத்துக்கும்மேற்பட்டோர்  விண்ணப்பித்துள்ளனர்.  டிஎன்பிஎஸ்சி தேர்வு வரலாற்றிலேயே இந்த தேர்வுக்குத் தான் அதிக பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியாளர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், குரூப் -4 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. டிஎன்பிஎஸ்சி  தலைவர் பாலச்சந்திரன், குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்றார். மேலும், குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்தார்.

இந்த தேர்வு மூலம் காலியாக  7,382 பணியிடங்கள் நிரப்பபடும் என்றும், இதில்  81 இடங்கள் விளையாட்டு கோட்டாவுக்கம்,   274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும் அடங்கும் என அறிவித்தார்.

இந்த நிலையல், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு நேற்றுவரை  இரவு வரையிலான தகவலின்படி மொத்தம் 21 லட்சத்து 11 ஆயிரத்து 357 பேர் இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். கடைசி நாளான நேற்று (28/04/2022) மட்டும் மூன்று லட்சத்துக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு வரலாற்றிலேயே இந்த தேர்வுக்கு தான், இவ்வளவு பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விண்ணப்ப பதிவு செய்தவர்களின் புள்ளிவிவரங்களுடன் காலிப்பணியிடங்களுக்கான எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்க்கும்போது ஒரு பணியிடத்துக்கு கிட்டத்தட்ட 300 பேர் போட்டியிடுகின்றனர்.

விண்ணப்பப்பதிவு முடிந்துள்ள நிலையில், இந்த பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை மாதம் 24-ந் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.