வேலூர்: வேலூரில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சிறிய விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
‘நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்’ என்ற தலைப்பில் வேலூர் மாவட்டத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சுமார் ரூ.1 கோடி மதிப்பில் மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, அக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் வி.கே.சிங் திறந்து வைத்ததுடன், அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் இயந்திரத்தை பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி உள்பட பல்வேறு பாஜக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் வி.கே.சிங் கூறியதாவது, “சாதி மத காரணங்களால் எந்த ஒரு திட்டமும் மக்களுக்கு தடைபடக்கூடாது என்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் கிடைக்கும் வகையில், திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த நாடாக மாறும். அதற்கான முயற்சிகளை பிரதமர் எடுத்து வருகிறார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி இந்த சமுதாயத்திற்கு இனிவரும் காலங்களில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்த உள்ளார்.
தமிழ்நாட்டில் 37 லட்சம் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில், இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 11.4 லட்சம் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் ஒரு பயனாளி இருந்தால், அந்தக் குடும்பத்திற்கு இலவச எரிவாயு இணைப்பு, இலவச குடிநீர், இணைப்பு மின்சார இணைப்பு உள்ளிட்ட பல்வேறு இலவச திட்டங்கள் கிடைக்கும்.
இது போன்ற திட்டங்களைத்தான் பிரதமர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு என பிரதமர் திட்டங்களை தீட்டி, அதனை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
குறிப்பாக பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், ஏழை எளிய மக்களுக்கு திட்டங்களை தீட்டி நடைமுறைபடுத்தி வருகிறார். இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நாட்டில் வறுமையை அகற்றி, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார். அதன் காரணமாக, நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் குறித்த விழிப்புணர்வு, வாகனத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
அப்போது செய்தியாளர் ஒரவர், வேலூர் விமான நிலையம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர், வேலூரில் உள்ள விமான நிலையம் சிறிய ரக விமானங்கள் இயக்கும் வகையில் உள்ளது. இதனால், இங்கு சிறிய விமானங்கள் இயக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இங்கிருந்து சிறிய ரக விமானங்கள் இயக்கப்படும் என்றார்.தார்.