சென்னை:  தமிழ்நாடு முழுவதும் இந்த மாதம் (ஜனவரி) 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.  தமிழகம் முழுவதும் நடப்பு ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூன்று நாட்கள் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குடிமகன்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் கீழ் டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகிறது. முக்கிய தினங்களில் தமிழகத்தில் டாஸ்டாக் கடை மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வருகிறது.

அதாவது பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான வருகிற 16-ம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து, ஜனவரி 25-ம் தேதி வள்ளலார் நினைவு தினம், ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினம் ஆகிய இரு நாட்களும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில்,  மது கடைகள் மற்றும் பார்களை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் முக்கிய விதிமுறையாகும். அதன்படி தமிழகத்தின் மாவட்டங்களில் இருக்கும் ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்து அந்தந்த மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

அதில், விடுமுறை நாட்களில் மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றால், சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், மற்றும் எப்.எல்-2 மற்றும் எப்.எல்-3 உரிமைத்தாரர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.