தாலாட்டித் தூங்கவைக்கும் ஆன்லைன் வகுப்புகள்.
பெரிய வகுப்பு மாணவர்களுக்குப் பாடம் நடத்துவது எளிது. ஆனால் இந்த குட்டீஸ் பண்ணும் அட்டகாசங்களை யாராலும் சமாளிக்க முடியாது. அப்படி இருக்கும் போது, ஆன்லைன் வகுப்புகளை மட்டும் ஒழுங்காகக் கவனிப்பார்களா என்ன. பெற்றோர் – ஆசிரியர்கள் இருவருமே ஒரு சேர சொல்வது, “நல்லா தூங்குதுங்க பசங்க” என்பது தான்.
“கிளாஸ் முழுசும் தூக்கம் தான் இவனுக்கு” என்கிறார் தனது இரண்டரை வயது மகனைப்பற்றி மதுரவாயிலைச்சேர்ந்த கல்பனா. ஜூம் ஆப் மூலமாக நடத்தப்பட்ட வகுப்புகள் எதிலும் இவரது மகன் விருப்பம் காட்டவேயில்லை. சுத்த போரிங் என்று தூங்கி விடுவதாகச் சொல்கிறார்.
பிரியங்கா கோஷ், “ரெண்டு நாள் முன்னால களி மண்ணுல சில ஆக்டிவிட்டீஸ் பண்ணி காட்டினாங்க ஆன்லைன் மூலமா. பாவம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான் மாங்கு மாங்குனு அங்கேயும் இங்கேயும் ஓடிட்டு திரிஞ்சாங்களேயோழிய குழந்தைகள் அதுக இஷ்டத்துக்கு விளையாடிட்டு தான் இருந்துச்சுங்க. களிமண்ணை தூக்கி கம்ப்யூட்டர் மேலேயே எறிஞ்சிட்டு ஓடிடுதுங்க” என்கிறார்.
“நான் ஒவ்வொரு ஸ்டூடண்ட்க்கும் தனித்தனியா கிளாஸ் எடுக்க ட்ரை பண்ணினேன். ஆனா எல்லாம் கொட்டாவி விட்டுக்கிட்டு, மூக்கு காதை நோண்டிக்கிட்டும், சிலதுகள் ஸ்க்ரீன்லயே வராம ஓடிடுதுங்க” என்று சிரிக்கிறார் ஹேமலதா, ஆசிரியை.
20 நிமிசத்துக்கு மேல நாங்க கிளாஸ் எடுக்குறதே இல்ல. துறுதுறுன்னு திரியிற பசங்கள மணிக்கணக்கால்லாம் கம்ப்யூட்டர் முன்னால உட்கார வைக்க முடியாது” என்று விளக்குகிறார் மடிப்பாக்கம் ஆரஞ்ச் ட்ரீ பிரீ ஸ்கூல் நிறுவனர் முகமது அபுபக்கர்.
ஆறாம் வகுப்புக்கு மேலே படிக்கிற பசங்களுக்கு தான் இந்த ஆன்லைன் வகுப்புகள் எல்லாம் சரியா வரும். 2, 3 வயசு குழந்தைகளை இப்டி கம்ப்யூட்டர் முன்னால வலுக்கட்டாயமாக உட்கார வைக்கிறது அவங்களோட கவனிக்கும் திறனையே பாதிக்கும். அதுக்கு பதிலா வேடிக்கையா விளையாட்டுக்களை பண்ண வைக்கிறது நல்லது. எடுத்த உடனே ஏபிசிடினு படுத்துறது நல்லதில்ல” என்று எச்சரிக்கிறார் நியூரோசைக்காலஜிஸ்ட் டாக்டர் விருதகிரிநாதன்.
கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஐந்தாம் வகுப்பு வரை ஆன்லைன் கிளாஸ் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையே தமிழக அரசும் பின்பற்றினால் நலம்.
– லெட்சுமி பிரியா