ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்த நிலையில் இதில் சிக்கியுள்ள 8 பேரை உயிருடன் மீட்பது மிகவும் கடினமான காரியம் என்று தெலுங்கானா மாநில அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ் கூறியுள்ளார்.

தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் SLBC சுரங்கப் பணி நடைபெற்று வருகிறது, 14 கி.மீ. தூரம் தோண்டப்பட்ட இந்த சுரங்கத்தின் ஒரு பகுதியில் துளையிடும் போது அதிகப்படியான நீர் சூழ்ந்ததைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட மண் சரிவில் துளையிடும் இயந்திரத்தில் வேலை செய்து வந்த 8 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.

கடந்த சனிக்கிழமை காலை இந்த விபத்து நிகழ்ந்த நிலையில் 48 மணி நேரம் ஆன நிலையில் இதுவரை இடிபாடுகளில் சிக்கிய 8 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இதேபோன்ற சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்ட எலி சுரங்க தொழிலாளர்கள் என பலரும் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தெலுங்கானா மாநில நீர்வளத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் இந்த மீட்பு நடவடிக்கையை நேரடியாக கண்காணித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுரங்கத்தின் உள்ளே மீட்பு நடவடிக்கையை பார்வையிட்ட அமைச்சர் ஜூபள்ளி கிருஷ்ணா ராவ், தான் சென்ற இடத்தில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நடந்துள்ளதாகவும்.

அந்த இடத்தில் இருந்து விபத்து நடைபெற்ற இடம் வரை தண்ணீரும் சேறும்சகதியுமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், இடிபாடுகளை பார்க்கும்போது இந்த நடவடிக்கை மேலும் மூன்று அல்லது நான்கு நாட்கள் நீடிக்கும் என்றும் சுரங்கத்தில் சிக்கியவர்களை உயிருடன் மீட்பது என்பது மிகவும் கடினமான காரியம் என்றும் கூறினார்.

சிக்கியவர்கள் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் மற்றும் ஸ்ரீனிவாஸ், சன்னி சிங் (ஜம்மு காஷ்மீர்), குர்பிரீத் சிங் (பஞ்சாப்) மற்றும் சந்தீப் சாஹு, ஜக்தஜாஸ், சந்தோஷ் சாஹு மற்றும் அனுஜ் சாஹு என அடையாளம் காணப்பட்டுள்ளனர், அனைவரும் ஜார்க்கண்டைச் சேர்ந்தவர்கள். இப்போதைக்கு, அவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் “மிகவும் தொலைவில்” இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர், இருப்பினும் அவர்களை அடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த எட்டு பேரில் அமெரிக்க சுரங்கப்பாதை நிறுவனமான தி ராபின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு இந்திய பொறியாளர்கள் அடங்குவர், மீதமுள்ளவர்கள் ஜேபி அசோசியேட்ஸின் ஊழியர்கள்.