சென்னை: மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில், யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக பிரபல எழுத்தாளர்  பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டு உள்ளார்.

மணிப்பூர் வன்முறை சம்பவம் மற்றும் பாலியல் வன்கொடுமை போன்றவை குறித்து உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் மத்திய, மாநில அரசுகளை கடுமையாக சாடியிருந்தார். இது தொடர்பான தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த பதிப்பாளரும், எழுத்தாளதுமான பத்ரி சேஷாத்ரி மணிப்பூரில் கொலை நடக்கத்தான் செய்யும், தலைமை நீதிபதி சந்திரசூட் என்ன செய்ய முடியும், அவரிடம் துப்பாக்கியைக் கொடுத்து மணிப்பூர் அனுப்பி வைக்கலாம் என கூறியிருந்தார்.

இதுதொடர்பான , பெரம்பலூர் மாவட்ட வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில், பெரம்பலூர் மாவட்ட காவல்துறை , பத்திரி சேஷாத்திரி மீது  3 பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்து சென்னை வந்து கைது செய்தனர்.

ஏற்கனவே, தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக்கல்வி கழகத்திற்கான ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்த பத்ரி சேஷாத்ரி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா குறித்து டிவிட்டர் பக்கத்தில்,  சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்pதருந்தார்.  3 மாதங்களில் இந்தி கற்க முடியும். அதன்பிறகு அந்த மொழியில் கற்க ஒன்றுமில்லை என்று பேரறிஞர் அண்ணா கூறி இருந்தார். அது ஒரு அபத்தமான கூற்று என்றும் அண்ணா ஒரு முட்டாள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பத்ரி சேஷாத்ரி கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதிபதிவிட்டிருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு அவரை,  தமிழ் இணையக்கல்வி ஆலோசனைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது. இந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி ஷேசாத்திரியை தமிழக போலீசார் இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழக பாஜ., வன்மையாகக் கண்டிக்கிறது. சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக போலீசாரின் பணியா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பத்ரி சேஷாத்திரி யார்?

தமிழகப் பதிப்பாளரும் எழுத்தாளரும் ஆவார் கும்பகோணத்தில் பிறந்த பத்ரி சேசாத்ரி நாகப்பட்டினத்தில் தன் பள்ளிப்படிப்பை முடித்து 1991 இல் சென்னை இந்தியத் தொழிநுட்பக் கழகத்தில் இயந்திரவியலில் இளநிலைப் பட்டமும் 1996 இல் அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். கிரிக்கின்போ என்ற கிரிக்கெட் விளையாட்டுக்கான இணையத்தள தகவல் நிறுவனத்தை உருவாக்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர்[2]. 2004 ஆம் ஆண்டில் நியூ ஒரைசன் மீடியா[3] என்ற தமிழ்ப் புத்தகப் பதிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தற்போது அதன் பதிப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் இருக்கிறார்.

சிறுவர்களுக்காகச் சில அறிவியல் புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள இவர், சில ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். அம்ருதா பத்திரிகையில் தொடர்ந்து அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.