சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு புகைப்படம் வெளியிட்ட பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் பலரும் கைதாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக புகைப்படம் வெளியிட்ட, கடலூர் மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகி ஜெயக்குமார் நெல்லை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட புகாரில் அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர் மீது திமுக நிர்வாகி திருநெல்வேலி காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவுசெய்த போலீசார் பாஜக நிர்வாகி ஜெயக்குமாரை கைது செய்து, விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்து வந்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அரசியல் கட்சியினர் பழகிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆட்சியாளர்கள், விமர்சனங்களை பார்த்து, தங்களை திருத்திக்கொள்ள முன்வர வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஆட்சியையோ, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து விமர்சித்தாலோ, அவதூறு பதிவிட்டாலோ அவர்கள்மீது சைபர் கிரைம் காவல்துறையினரைக் கொண்டு கைது செய்து வருகிறது தமிழ்நாடு அரசு. விமர்சனங்களை எதிர்கொள்ளாமல், அதை ஒடுக்குவதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதன் மூலமே அவர் செல்லும் பாதை எவ்வளவு தவறானது என்பதை உணர முடியும். மாறாக விமர்சனம் செய்வோரை மிரட்டுவதை ஏற்க முடியாது. அது ஜனநாயகம், பேச்சுரிமைக்கு எதிரானது. அதே வேளையில், மாற்று கட்சியினரை விமர்சனம் செய்யும் திமுகவினர் கைது செய்யப்படுவது இல்லை. இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.