சென்னை: நல்லாசிரியர் விருது எனப்படும்  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குரிய ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது. இந்த ஆண்டு- 386  நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழ்நாட்டில், ஆசிரியா்களை ஊக்கப்படுத்தும் வண்ணம் தமிழக அரசு ஆண்டுதோறும் செப்டம்பா் 5 ஆம் நாள் மாநிலத் தலைநகரான சென்னையில் முதல் அமைச்சரால் அல்லது அமைச்சா் பெருமக்களால் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது  1997ம் ஆண்டு முதல்  ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ என்னும் பெயரில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 2023-24-ம் ஆண்டு இந்த விருதுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்கும் அனைத்துவகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.  விருது பெறும் ஆசிரியர்களுக்கு  ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும், ரூ.2 ஆயிரத்து 500 மதிப்பிலான வெள்ளிப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பயணப் படியும் வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி, 38 மாவட்டங்களில் 342 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், மெட்ரிக் பள்ளிகளில் மாவட்டத்துக்கு ஒரு ஆசிரியர் வீதம் 38 பேர், ஆங்கிலோ இந்திய பள்ளிகள், சமூக பாதுகாப்புத்துறை பள்ளிகள், மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் தலா 2 பேர் என மொத்தம் 386 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

2023-24-ம் ஆண்டு இந்த விருதுக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட மாவட்ட தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

அதில், முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமையிலான குழு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளிகளுக்கு சென்று அவர்களுடைய செயல்பாடுகளை கண்டறிந்து மதிப்பீடு செய்யவேண்டும்.

விண்ணப்பித்த ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகள் மற்றும் பிற சான்றுகள் மாவட்ட அளவில் உரிய அலுவலர்களால் சரிபார்க்கப்பட வேண்டும்.

மாவட்ட தேர்வு குழுவினர் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியல், கருத்துருக்களை பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான மாநில தேர்வு குழுவின் பரிசீலனைக்கு ஆகஸ்டு மாதம் 14-ந் தேதிக்குள் பரிந்துரைக்கவேண்டும்.

மாநில தேர்வு குழு மாவட்ட தேர்வு குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் இறுதி பட்டியலை தயாரிக்க வேண்டும்.

விருதுக்கு விண்ணப்பிக்கும் அனைத்துவகை ஆசிரியர்களும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.

பரிந்துரைக்கப்படும் ஆசிரியர்கள் எந்தவித குற்றச்சாட்டுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் உட்படாதவராகவும், பொதுவாழ்வில் தூய்மையானவராகவும், பொது சேவைகளில் நாட்டம் கொண்டவராகவும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை குறைத்தல், பள்ளி மாணவர் சேர்க்கை, தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துதல், கல்வித் தரத்தில் பின்தங்கிய மாணவர்களின் தரத்தை முன்னேற்ற பாடுபடுபவராகவும் இருக்க வேண்டும்.

அரசியலில் பங்குபெற்றும் அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களின் பெயர்களை கண்டிப்பாக பரிந்துரைக்க கூடாது.

கல்வியினை வணிகரீதியாக கருதி செயல்படும் ஆசிரியர்களையும், இந்த விருதுக்கு தகுதியற்றவர்களாக கருதப்படவேண்டும்.

மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்டு தேசிய விருது பெற்ற எந்த ஆசிரியரையும் பரிந்துரை செய்தல் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.