சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள தேவநாதன் யாதவ், ரூ.525 கோடி மோசடி செய்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புகார் அளித்துள்ளது.

நாட்டின்  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு  நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில்  மொத்தமுள்ள  39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில்,  ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும்  அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

பாஜக சார்பில், சிவகங்கை தொகுதியில்,  யாதவ் மகாசபை தலைவர் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார்.  பாஜகவுக்கு சாதகமான 9 தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்றாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.  சிவங்கையில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் களமிறங்கி உள்ளார். சிட்டிங் எம்.பி.யான அவர் முன்னிலையில் உள்ளார்.  மேலும், அதிமுக சார்பில், சேவியர் தாஸ் என்ற வேட்பாளரும்,  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி ஆகியோர் களத்தில் உள்ளனர். இதனால், அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக தொடர்புத்துறை தலைவர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்,   சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி செய்துள்ளதாக  புகார் அளித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் தேவநாதன் அளித்துள்ள காசோலை 4 மாதமாக வங்கியில் செல்லுபடியாகாமல் திரும்பி வந்துள்ள நிலையில், அவர் தேர்தலில் போட்டியிட B படிவத்தில் எப்படி அண்ணாமலை கையெழுத்திட்டார்?  என கேள்வி எழுப்பியதுடன்,  நிதி மோசடி செய்துள்ள பாஜக வேட்பாளர் வேதநாதனை, அண்ணாமலையும் தமிழிசையும் பாதுகாக்கக் கூடாது” , அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.