ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக, உச்சநீதிமன்ற அனுமதியின் பேரில் அங்கு சென்றுள்ள குலாம்நபி ஆசாத் கூறியுள்ளார்.

முன்னாள் காஷ்மீர் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான குலாம்நபி ஆசாத், மத்திய அரசு ஆகஸ்ட் 5ம் தேதி மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து முதன்முறையாக காஷ்மீருக்கு சென்றார். அவர் இதற்கு முன்னதாக 3 முறை காஷ்மீருக்குள் நுழைய முயன்றும், விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பப்பட்டார்.

மொத்தம் 6 நாட்கள் திட்டமிடப்பட்ட பயணத்தில், 4 நாட்கள் காஷ்மீரில் இருந்துவிட்டு கடைசி 2 நாட்கள் ஜம்முவிற்கு வந்த அவரிடம் நிருபர்கள் வினவியபோது, “உங்களிடம் சொல்வதற்கு இப்போதைக்கு என்னிடம் எதுவும் இல்லை. 4 நாட்கள் காஷ்மீரில் இருந்துவிட்டு, இப்போது 2 நாட்களுக்காக ஜம்மு வந்துள்ளேன்.

மொத்தமாக 6 நாட்கள் முடிந்தபிறகு நான் உங்களிடம் நான் கண்டதை சொல்கிறேன்.
ஆனால், காஷ்மீரில் நிலைமை படுமோசமாக இருக்கிறது என்பது உண்மை. நான் செல்ல நினைத்த இடங்களில் 10% கூட என்னை அனுமதிக்கவில்லை நிர்வாகம். அ‍‍ங்கே கருத்து சுதந்திரம் சுத்தமாக முடக்கப்பட்டுள்ளது”. என்றார்.