புதுடெல்லி: கடும் நெருக்கடியில் சிக்கி தள்ளாடும் பிஎஸ்என்எல் அரசு தொலைதொடர்பு நிறுவனத்தை புனரமைத்து மீண்டும் அதை சீரான முறையில் வெற்றிகரமாக இயங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டுமென அதன் ஊழியர்கள் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தற்போது நெருக்கடியில் இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூடுவதற்கு மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக வெளியான தகவல்களையடுத்து இந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.

“இந்த நாட்டைக் கட்டமைப்பதிலும், பல அரசு திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதிலும் பிஎஸ்என்எல் ஆற்றிய அபரிமிதமான பங்களிப்பு குறித்து, அந்நிறுவனத்தை மூடுவதற்கான முன்மொழிவை பரிந்துரைத்த குழுவில் இடம்பெற்ற அதிகாரிகள் அறியும் வாய்ப்பைப் பெற்றிருக்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார் அந்நிறுவனத்தின் பணியாளர் யூனியன் பொதுச் செயலாளர் செபஸ்டின்.

கடுமையான நஷ்டத்தில் இயங்கினாலும், சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின்போது அங்கிருந்த அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கான லேன்லைன் மற்றும் மொபைல் சேவைகளை அளித்தது இந்த பிஎஸ்என்எல் -தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் செபஸ்டின்.

இன்றும்கூட நாட்டின் பல தொலைதூர பகுதிகளுக்கு தொலைதொடர்பு சேவையை, நஷ்டத்திற்கு இடையிலும் வழங்கிக் கொண்டிருப்பது இந்நிறுவனம்தான் என்றார் அவர்.