ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் ‘மேன் ஆப் தி மேட்ச்’ ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது சிராஜ் தனது பரிசுத் தொகையை கிரவுண்ட்ஸ்மென்-களுக்கு வழங்கிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையின் கொழும்பு மற்றும் கண்டி மைதானங்களில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து ஆட்டத்தின் போதும் மழை காரணமாக தடைப்பட்டது.

இந்த போட்டியின் இறுதி ஆட்டம் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையே கொழும்புவில் இன்று நடைபெற்றது.

15.2 ஓவர்களில் 50 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இந்தியாவுக்கு 51 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இலங்கை.

6.1 ஓவரிலேயே இந்த இலக்கை எட்டிய இந்திய அணி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பையை வென்றது.

இதில் 7 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்காக அவருக்கு 5000 அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது இந்த பரிசுத் தொகை முழுவதையும் கொழும்பு மைதான கிரவுண்ட்ஸ்மென்களுக்கு வழங்குவதாகவும் அவர்கள் இல்லாமல் எந்த ஒரு போட்டியும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அப்போது அவர் கூறினார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஏற்கனவே கொழும்பு மற்றும் கண்டி மைதான கிரவுண்ட்ஸ்மென்களுக்கு 50000 அமெரிக்க டாலர்கள் வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.