புகழ்பெற்ற ‘தி பீட்டில்ஸ்’ இசைக்குழுவைச் சேர்ந்த பாடகர் ஜான் லெனானை கொன்ற மார்க் டேவிட் சாப்மேன் தன்னை விடுதலை செய்யக்கோரி 12 முறையாக முறையிட உள்ளார்.

1960-70 களில் உலகையே தங்கள் இசையால் கட்டிப்போட்ட ‘தி பீட்டில்ஸ்’ இசை குழுவை ஜான் லெனான், பால் மெக்-கார்ட்னே, ரிங்கோ ஸ்டார் மற்றும் ஜார்ஜ் ஹாரிசன் ஆகிய நான்கு இசைக்கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கினர்.

‘தி பீட்டில்ஸ்’ இசை குழு

உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருந்த இந்த இசைக்குழுவின் ஆல்பங்கள் லட்சக்கணக்கில் விற்பனையானது இதனால் இந்த குழுவில் இருந்த இசைக்கலைஞர்கள் செலவச் செழிப்பில் திளைத்தார்கள் என்றால் அது மிகையல்ல.

1980 ம் ஆண்டு டிசம்பர் 8 ம் தேதி இந்த குழுவைச் சேர்ந்த ஜான் லெனான் தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்து நியூயார்க் நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது இரவு 11 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார், அப்போது அவருக்கு வயது 40.

ஜான் லெனான்

உலகையே உலுக்கிய இந்த படுகொலை சம்பவத்தை அடுத்து ஹவாய் தீவுகளை பூர்வீகமாகக் கொண்ட மார்க் டேவிட் சாப்மேன் என்ற செக்யூரிட்டி வேலை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

ஜான் லெனானை கொலை செய்ததற்காக 1981 ம் ஆண்டு இவருக்கு 20 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மார்க் டேவிட் சாப்மேன்

தற்போது 67 வயதை எட்டியுள்ள சாப்மேன், 2000 ம் ஆண்டு தனது தண்டனை காலம் முடிந்தது முதல் கடைசியாக 2020 ஆகஸ்ட் மாதம் வரை 11 முறை தன்னை விடுதலை செய்யக்கோரி நீதிமன்றத்தை நாடினார்.

ஒவ்வொரு முறையும் இவரது கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் 2 ஆண்டுகள் கழித்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியது, 12 வது முறையாக மீண்டும் அடுத்த வாரம் மனு செய்ய இருப்பதாக சாப்மேன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

லெனானை கொலை செய்தது தொடர்பாக அவரது 25 வயதில் கைது செய்யப்பட்ட சாப்மேன் “பணத்துக்காக வாழாமல் ஆசையை துறந்து பிறருக்காக வாழ அறிவுறுத்திய லெனான், அப்பாவி மக்கள் வாங்கிய அவரது இசை ஆல்பத்தில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு ஆடம்பர சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்.

மக்களை ஏமாற்றி பிழைத்த இவருக்கு பாடம்புகட்டவே அவரை கொன்றேன்” என்று அப்போது கூறியிருந்தார்.