சிங்கப்பூர்

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் செல்லும் பயணிகளைத் தனிமைப்படுத்த வசதியாக மின்னணு பட்டி ஒன்றை அணிய உத்தரவிடப்பட்டுள்ளது.

மாதிரி படம்

உலக நாடுகளில்  கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் விரும்பி பயணம் செய்யும் சிங்கப்பூரில் இதுவரை 53000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   இந்த பரவல் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து வருவோரிடம் இருந்து ஏற்பட்டுள்ளது.

தற்போது சிங்கப்பூரில் மூன்று இலக்க அளவில் தினசரி பாதிப்பு உள்ளது.  இதையொட்டி சிங்கப்பூரில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.   சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் உள்நாட்டினர் என யாவரும் இங்கு வந்தவுடன் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டியது அவசியம் ஆக்கப்பட்டுள்ளது.  இதற்கு வசதியாக வெளிநாட்டிலிருந்து வருவோர் அனைவரும் ஒரு மின்னணு பட்டி அணிவது அவசியமாக்கப்பட்டுள்ளது.

கைக்கடியாரத்தைப் போல் இருக்கும் இந்த பட்டியைச் சிங்கப்பூருக்கு வருவோர் அனைவரும் எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.   இந்த  கருவியில் உள்ள புளூடூத் மற்றும் ஜிபிஎஸ் மூலம் பயணிகள் எங்குள்ளனர் என்பதைக் கண்காணிக்க முடியும்.   அத்துடன் இந்த பட்டி மூலம் அரசு இவர்களுக்குப் பல அறிவுரைகளை அளிக்க உள்ளது.  பட்டி அணிந்திருப்போர் இந்த அறிவுரைகளுக்கு உடனடியாக பதில்  அளிக்க வேண்டும்

ஏற்கனவே இந்த நடவடிக்கை ஹாங்காங் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் பின்பற்றப்பட்டு வெற்றி கண்டுள்ளது.   இந்த கைப்பட்டி மூலம் தனிமைப்படுத்தலை மீறுவோரையும் எளிதாகக் கண்டறிய முடியும்.   இதில் எத்தகைய தனிப்பட்ட விவரமும் ஏற்றப்படுவது கிடையாது என்பதால் இது பாதுகாப்பானது எனக் கூறப்படுகிறது.  தனிமை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இந்த பட்டியை 12 மற்றும் அதற்குக் குறைவான வயதுடையோர் அணிய தேவை  இல்லை.