ஜெனீவா:
ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலில் பேசிய வைகோவை சிங்களவர்கள் மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த இப்படுகொலைகள் பற்றியும், அங்கு வாழும் தமிழர்களுக்கான தீர்வு குறித்து ஜெனிவாவில் ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் வைகோ பேசினார்.
தனது முதல் உரையில் அவர் தெரிவித்ததாவது:
“இலங்கையில் நடைபெற்ற தமிழ் இனப் படுகொலை போர்க்குற்றங்கள் குறித்து, மனித உரிமைகள் கவுன்சில் இலங்கை அரசுக்கு 2012 ஆம் ஆண்டில் இருந்து, பல பரிந்துரைகளைச் செய்தது.
ஆனால், எந்தப் பரிந்துரைகளையும் இலங்கை அரசு ஏற்கவில்லை, நிறைவேற்றவில்லை.
இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைப் பாதுகாக்க ஐ.நா.மன்றம் தவறி விட்டது.
தற்போது தமிழ் இனக் கலாச்சாரப் படுகொலை உட்பட, கட்டமைக்கப்பட்ட படுகொலை சிங்கள அரசால் நடத்தப்படுகின்றது.
பெண்கள் காணாமல் போன தங்கள் கணவன்,தந்தை,பிள்ளைகளைப் பற்றிய எந்தத் தடயமும் கிடைக்காமல், துயரத்தில் வாடுகிறார்கள். , 90000 போர்க்கால விதவைகள் கதறுகிறார்கள்.
தமிழ் ஈழப் பகுதியில் இருந்து இலங்கை அரசின் இராணுவத்தை முற்றாக வெளியேற்ற மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வைகோ பேசினார்.
தனது இரண்டாவதுஉரையில், “இன்றைக்கும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான சித்திரவதையும், படுகொலைகளும் சிங்கள இராணுவம், போலீசால் நடத்தப்படுகின்றது.
உதாரணமாக 2016 டிசம்பரில் யாழ் பல்கலைக்கழகத்தின் இரண்டு மாணவர்கள் நடராஜன் கஜன், பவுன்ராஜ் சுலக்சன் சிங்களப் போலீசாரால் மிருகத்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு சிங்கள இராணுவம் ஆளாக்குகிறது.
பொதுபலசேனா என்ற சிங்களக் குண்டர்களைக்கொண்ட அமைப்பு, கிழக்கு மாகாணத்தில் மசூதிகளைத் தாக்குவதோடு, இஸ்லாமிய மக்கள் மீதும் வன்முறையைக் கட்டவிழ்க்கிறது.
ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்கும், நீதி கிடைப்பதற்கும் இருக்கின்ற ஒரே வழி என்னவென்றால், மனித உரிமைகள் கவுன்சில் இந்தப் பிரச்சினையை ஐ.நா.வின் பொதுச் சபைக்கு அனுப்புவதோடு, இலங்கை அரசு நடத்திய இனப்படுகொலை போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் அமைப்பதற்கு ஐ.நா.வின் பாதுகாப்புச் சபை முன்வர வேண்டும் என்று பரிந்துரை செய்ய வேண்டும்” என்று வைகோ தெரிவித்தார்.
உரையை முடித்துவிட்டு கிளம்ப முற்பட்ட வைகோவோ சிங்களவர்கள் ஆறேழு பேர் சூழ்ந்து கொண்டார்கள். அவர்களில் ஒரு பெண்மணி, “நீங்கள் இலங்கைப் பிரஜை இல்லையே? இலங்கையைப் பற்றி எப்படிப் பேசலாம்?” என்று கேட்டார்.
அதற்கு வைகோ பொறுமையாக, “நீங்கள் யார்? இலங்கையைச் சேர்ந்தவரா? நீங்கள் சிங்களப் பெண்மணியா?” என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண்மணி, “ஆமாம்” என்றார்.
உடனே வைகோ, “நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி இரத்த உறவு இருக்கின்றது. எனக்குப் பேச உரிமை உண்டு” என்றார்.
அதற்குள் அவரைச் சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள், “விடுதலைப்புலிகள் கொடூரமான கொலைகாரர்கள். அக்கிரமக்காரர்கள். அவர்களை ஆதரித்து நீ எப்படிப் பேசலாம்?” என்றார்கள்.
அதற்கு வைகோ, “இலட்சக்கணக்கான தமிழர்களை நீங்கள் கொன்றீர்கள். எங்கள் தாய்மார்கள் சகோதரிகளைக் கற்பழித்துக் கொன்றீர்கள். எங்கள் பச்சைக் குழந்தைகளைக் கொன்றீர்கள். நீங்கள் கொலைகாரப் பாவிகள்” என்றார்.
இது குறித்து ஈழத்தமிழர் வட்டாரத்தில், “ வைகோவை சூழ்ந்துகொண்டு தகராறு செய்த சிங்களவர்கள் சுமார் 35 பேர் இருப்பார்கள். அவர்களில் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட முன்னாள் இராணுவத்தினர்தான் பெரும்பான்மையாக இருந்தார்கள். குறிப்பிட்ட பெண்மணி வைகோவுடன்தகராறு செய்வதை, அனுமதியின்றி மனித உரிமைகள் கவுன்சிலுக்கு உள்ளேயே சிலர் வீடியோ எடுத்தார்கள்.
வைகோவை மனித உரிமைகள்கவுன்சிலுக்குள் வரவிடாமல் தடுக்கச் செய்கின்ற சதி இது” என்று ஈழத்தமிழர்கள் கூறினார்கள்.