பிரகாசம், ஆந்திரா

ந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் கோவில் புனரமைப்பு பணியின் போது கிடைத்த 500க்கும் அதிகமான வெள்ளி நாணயங்களை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உம்மடிவரம் என்னும் சிற்றூர் உள்ளது.  இங்கு மாசம்மா கோவில் என்னும் பழைய ஆலயம் உள்ளது.  அதைப் புனரமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.   அந்த பணிகளுக்காக மண் தோண்டப்பட்டுள்ளது.

அப்போது மழை பெய்ததால் சேற்றை வாரிய போது அதில் ஏராளமான பழங்கால நாணயங்கள் கிடைத்துள்ளன.  அப்போது அங்கிருந்த கிராம மக்கள் கையில் கிடைத்த நாணயங்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  இது சுமார் 500க்கும் அதிகமான நாணயங்கள் எனத் தெரிய வந்துள்ளது.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் அந்த பழங்கால நாணயங்கள் அரசுக்குச் சொந்தமானவை எனவும் அவற்றை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.  இந்த நாணயங்கள்: 19 ஆம் நூற்றாண்டில் அச்சிடப்பட்டவை ஆகும்.

மக்களால் எடுத்து செல்லப்பட்ட நாணயங்கள் முழுவதுமாக திரும்ப அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  எனவே அவற்றைக் கிராம மக்களிடம் இருந்து மீட்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.