நெட்டிசன்:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு
காந்தவிழி சுனாமி…. #HBD
கட்டினால் சிலுக்கு அன்றி கட்டியவன் காலை தொழுதல் நன்று..
சிலுக்கோட வாழ்வாரே வாழ்வார் மற்றோரெலாம்
சித்ரவதை பட்டே சாவார்..
சிலுக்குக்காக திருக்குறளை இயற்றியது மட்டுமின்றி பல புராணங்களையும் நண்பர்கள் மத்தியில் பாடியதெல்லாம் அது ஒரு பரவசமான காலம். அப்படிப்பட்ட சில்க் ஸ்மிதாவை சடலமாக பிரேதப் பரிசோதனை நிகழ்வை பத்திரிகைச் செய்திக்காக கவர் செய்வோம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
தமிழ் திரை உலகில் டி ஆர் ராஜகுமாரிக்கு பிறகு காந்த விழிகளால் மயக்கிய ஒரே அழகி. ஆந்திர ராஜமுந்திரியின் ஒரு குக்கிராமத்தில் விஜய லட்சுமியாக பிறந்ததே காந்த தேவதையின் பூர்வீகம்.. பதின் வயதிலேயே ஒரு சப்பை முறை மாப்பிள்ளையோடு திருமண பந்தமாக்கப்பட்டது பிடிக்காமல் சினிமா உலகில் சேர்ந்தாவது பிழைத்துக் கொள்ளலாம் என சென்னைக்கு ஓடி வந்தவர்..
1970களில் சிகப்புதோலுக்கு மட்டுமே சாமரம் வீசுவதை பாக்கியமாக கருதிய கோடம்பாக்கம், அழுக்காய் தெரிந்த கருப்பு தேவதையை கண்டு கொள்ளவேயில்லை.. ஆனாலும் கிடைத்த டச் அப் கேர்ள் வேலையை விட்டுவிடாமல் சினிமா உலகோடு பயணம் தொடர்ந்தது.. ஒரு கதையை உருவாக்கி பல ஆண்டுகளாய் காத்திருந்த வினுசக்ரவர்த்தியின் கண்களின் பட்டார் விஜயலட்சுமி.
வினுவுக்கு தெரிந்துவிட்டது, அவள் ஒரு பட்டை தீட்டாத வைரம் என்று. தெலுங்கு மட்டுமே பேசிய விஜிக்கு தமிழையும் ஓரளவுக்கு இங்கிலீசையும் பேச, எழுத, படிக்க கற்றுக்கொடுக்க தன் மனைவியிடம் சொன்னார் வினு.. வைரம் லேசாக பட்டை தீட்டப்பட்டதும் வண்டிச்சக்கரம் படத்தில் விஜியை இறக்கினார். படத்தின் இயக்குநர் விஜயனும், படம் முழுவதும் சாமான்யர்கள் பாத்திரங்கள் மட்டுமே வரும் என்பதால், கருத்த விஜிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. படத்தின் நாயகி சரிதாவே கருப்பு வைரம்தானே…
விஜயலட்சுமி என்ற இளம்பெண் வண்டிச்சக்கரம் படத்தில் சாராயம் விற்கும் பாத்திரமான ‘சில்க்’கிற்குள் நுழைக்கப்பட்டார். பேரையும் ஸ்மிதா என மாற்றினார் வினுசக்கரவர்த்தி.. 1980ல் வெளியான வண்டிச்சக்கரம். மைசூரில் தமிழர்கள் பிழைப்பு நடத்தும் காய்கறி மார்க்கெட் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது..ஆனால் படம் ரசிகர்களை ரிபீட் மோடில் திரும்ப திரும்ப தியேட்டர்களுக்கு படையெடுக்க வைத்த தற்கு ஒரே காரணம்.. ஒரு பாடல்தான்..
சாராயக்கடையில் சாமிக்கண்ணுவும், சுருளிராஜனும் வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை, என ஆரம்பித்து சில்க்கோட கையால வாங்கிகுடி..என்று பாடும்போதும் தியேட்டரே கிர்ரென்று ஆகும்..
சில்க் பாத்திரத்தில் நடித்த ஸ்மிதா அப்போது நெளிவு சுளிவுகளுடன் காட்டிய விதவிமான உடல் அழகு மொழிகள்தான் எத்தனையெத்தனை… இடுப்பு, முன்னழகு, பின்னழகு என அனைத்தையும் மீறி அந்த காந்த விழிகள் பாய்ச்சிய சொக்கவைக்கும் வீச்சு.. விவரிக்கவே முடியாது.. வண்டிச்சக்கர சாராய சில்க் ஸ்மிதாவின் பெயர் சில்க் என சில்லென சுருங்கிக்கொண்டு படங்களின் ஹீட்டை மட்டும் ஏற்றிக்கொண்டே வந்தது.. 80களில் எல்லா தமிழ் சினிமாக்களிலும் சென்சார் சர்ட்டிபிகேட்டுக்கு அப்புறம் தவிர்க்கமுடியாத போதை அஸ்திரமானார் சில்க்..
சகலகலா வல்லவனில் கமல்கூட நேத்து ராத்திரி யெம்மா பாடலாகட்டும், பாயும் புலியில் ரஜினியுடன் ஆடி மாதம் காத்தடிக்க பாடலாகட்டும்…சில்க்.. சில்க்.. சில்க் என்று கொண்டாடி தீர்த்தன திரையரங்குளின் ஆரவாரம்.. கலைப்படமான மூன்றாம் பிறை படத்தில் கமலுடன் பொன்மேனி உருகுதே கவர்ச்சிப்பாடலை, வைத்தது ஒருமாதிரியாகத்தான் இருந்தது என்று பாலு மகேந்திரா ஒரு பேட்டியில் சொன்னார்… உண்மையில் அந்த பாடல் இல்லையென்றால் அந்த படத்தின் வீச்சே மங்கிப்போயிருக்கும்.
சில்க் போன்ற கவர்ச்சியூட்டும் அதிரூப சுந்திரியின் நெருக்கம் கிடைத்தும், அவளுக்கு இணையாக கவர்ச்சி தேகம் கொண்ட ஒரு இளைஞன் ஒதுக்கி தள்ளுகிறான்.. ஆனால் அதே இளைஞன் இன்னொரு அழகான ஆனால் புத்தி பேதலித்த பெண்முன்னால் காமத்தை தவிர்த்துவிட்டு குழந்தையாக உலா வருகிறான்.. சில்க் இல்லையென்றால் அந்த படத்தில் கமலின் பாத்திரம் ஆண்மையில்லாத ஒரு ஒப்புக்கு சப்பான இளைஞன் பாத்திரம்போல்தான் இருந்திருக்கும்.. மூன்றாம் பிறை படத்திற்கு சில்க் தன்னையும் மீறி சேர்த்த கைங்கரியம் இது..
உச்சகட்ட புகழில் இருந்தபோது மூன்று நான்கு ஆண்டுகளில் அவரால் 200 படங்களை சர்வ சாதாரணமாக கடக்க முடித்தது. ஒரு பாட்டுக்கு வந்தாலும் சரி, வில்லனின் ஆசைநாயகியாக அவ்வப்போது வந்தாலும் சரி, சில்க் கவர்ச்சி முன்னால் மங்கிப்போகிறோம் என்பதை உணர்ந்த டாப் லேடி ஸ்டார்களும் நேரடியாக கவர்ச்சி களத்திற்கு வந்தே தீரவேண்டிய நிலையும் உருவானது.
ஒருகட்டத்தில், அதிலும் அம்பிகா, ராதா வகையறாக்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கவர்ச்சியை தாராளமயமாக்கினார்கள்.. இன்னொரு பக்கம் மலையாள பட உலகும் சில்க்கின் கவர்ச்சியை லட்ச லட்சமாய் மாற்றிக்கொண்டிந்தன..
தென்னகத்தின் மர்லின்மன்றோ என்று சொல்லப் படும் அளவுக்கு உய்ர்ந்த சில்க் ஸ்மிதா நிஜ வாழ்க்கையில் அவ்வளவாக சந்தோஷத்தை சந்திக்காதவர்.. ஆரம்பம் முதலே சலிப்பான மனநிலையால் அவரின் உள்மனது பற்றற்ற தன்மைக்கு போய்விட்டது என்பது அவர் வாழ்க்கையை உற்றுப்பார்த்தால் மட்டுமே புரியவரும்.
நடிக்க வீட்டைவிட்டு ஓடிவந்தபோது அவரது குடும்பத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபற்றி பின்னர் சில்க்கிடம் கேட்டதற்கு,, பணம், பங்களா வந்தபிறகு எல்லாம் சரியாய் போய்விட்டார்கள்’’ என குடும்பத்தினரின் நிஜமுகத்தை நாசூக்காய்தான் சொன்னார்.. புகழ் கிடைத்ததும் வந்து சேர்ந்தவர்களை காழ்ப்புணர்ச்சி காட்டி பொதுவெளியில் அவமானப்படுத்தவில்லை..
சிவாஜி போன்ற மூத்த ஜாம்பவான்கள் வரும்போது செட்டில் கால்மேல் போட்டு அமர்திருக்கிறார்களாமே என்று கேட்டதற்கு அவர் பதற்றப் படவேயில்லை..  ’’நான் சிறுவயதிலிருந்தே அப்படி கால்மேல்கால்போட்டே அமர்ந்து வளர்ந்தவள். செட்டில் ஆடி வந்துவிட்டு டயர்டாக அமரும் போது எனக்கு அதுதான் வசதி.. அதையெல்லாம் விட்டுவிட்டு போலியாக மரியாதை கொடுக்க நான் தயாரில்லை’’ என்று பட்டென்று சொன்னவர்.
எம்ஜிஆர் தலைமையில் திடீர் விழா என்றபோதும், ஏற்கனவே தெலுங்கு சூப்பர் ஸ்டாருக்கு கொடுத்த கால்ஷீட்டை கேன்சல் செய்தால், அதனை சமன் செய்ய சில மாதங்களாகும் என்றும் அதனால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் என்றும் தெரியவந்ததால், விழாவை ஒதுக்கிவிட்டு ஷுட்டிங்கிற்கு தைரியமாய் போனவர்.
சாவித்திரி, சுஜாதா மாதிரி நடிக்க ஆசைப்பட்டவருக்கு கிடைத்தது கவர்ச்சி வேடங்கள்தான்.. ஒரு கட்டத்தில் டாப் ஸ்டார் என்ற அந்தஸ்தை எட்டி, தயாரிப்பாளர்கள் அவர் காலடியில் தவமிருந்தபோதும், தனக்கு இந்த வெயிட்டான வேடம்தான் வேண்டும் என்று யாரையும் அவர் நிர்பந்தித்தது கிடையாது.
தன்னை நம்பி எதை எதிர்பார்த்து தயாரிப்பாளர்கள் வருகிறார்கள் என்பதும் அவர்களிடம் தனக்குள்ள செல்வாக்கை காட்டினால் குழப்பம் மிஞ்சி தர்ம சங்கடங்கள்தான் நேரும் என்று சொன்னவர் சில்க்
நூற்றுக்கணக்கான படங்கள் நடித்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் குளறுபடி செய்யும் நடிகை சில்க் என்று குற்றம்சாட்டி பத்திரிகை கள் எழுதியபோது, ‘’நீங்கள் சொல்வது உண்மையென்றால், ஏன் தயாரிப்பாளர்கள் என்னை தொடர்ந்து நாடிவருகிறார்கள்’’? என பத்திரிகை உலகத்தையே திருப்பி கேட்டவர்.
அலைகள் ஓய்வதில்லை படத்தின் ரோல்தான் அவருக்கு மிகவும் பிடித்தது என்பதால் சில்க்கின் முதல் பேவரைட் இயக்குநர் பாரதிராஜாதான். அடுத்து பாலுமகேந்திரா.. சில்க் ஸ்மிதாவின் மனம் கவர்ந்த ஒரே நடிகர், வேறு யாரு நம்ம உலக நாயகன்தான்.
சரியான நேரத்தில் திருமணமாகி செட்டில் ஆவேன் என்று சொல்லிக்கொண்டுவந்த சில்க் ஸ்மிதாவுக்கு.. கடைசியில் நிரந்தர வாழ்வு தந்தது தற்கொலைதான்.. எத்தனையெத்தனை மனிதர்கள் எத்தனையெத்தனை ஏமாற்றங்கள்.. மர்மச்சாவு கண்ட மர்லின் மன்றோபோல். சில்க் ஸ்மிதாவிற்கு இயற்கை தந்த அற்புதமான கொடை முப்பத்தி ஆறு வயதில் இப்பூவுலகை விட்டு விடை.
வயதான பிறகு கிடைக்கக்கூடிய முதிர்ந்த தோற்றத்தை பார்க்கக்கூடாது என்பதில் வெற்றி பெற்ற தேவதை.
என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்கு தெரியும்…?
அவள் ஒரு தொடர்கதை படத்தின் கண்ணதாசன் வரிகள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன..
(02.12.1960 – 23.09.1996)