ஜெயங்கொண்டம்: பெட்ரோல் விலையை தமிழகஅரசு  குறைக்காவிட்டால் தற்கொலை தாக்குதல் நடத்துவோம் எனவும், தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக  பாஜக நிர்வாகி அகோரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வரு கிறது. அதன்படி, நேற்று முன்தினம்  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவர் அகோரம்  தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய அகோரம், தமிழக முதல்வரை அவதூறாக விமர்சித்ததாகவும், பெட்ரோல் விலையை ஒரு வார காலத்திற்குள் குறைக்காவிட்டால் தற்கொலை தாக்குதல் நடத்துவோம் என்றும் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக  ஜெயங்கொண்டம் காவல் துறையினர் அகோரம்  மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து,  அவரது திருவெண்காடு வீட்டில்,  காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீசார் அ கைது செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஜகவினர் காவல்துறையினர் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து,  ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அகோரத்துக்கு  நீதிபதி சுப்பிரமணியன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.